திஸ்பூர்,
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள மோரிகான் மாவட்ட சிறையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகள் 5 பேர் நேற்று சிறையில் இருந்து தப்பியோடினர். நள்ளிரவு 1 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் சிறையில் இருந்து தப்பியிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறையின் ஜெயிலர் பிரசாந்தா சையிகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த சிறைக்கு கவுகாத்தியில் இருந்து தற்காலிகமாக 2 துணை ஜெயிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தப்பியோடிய கைதிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, சைபுதீன், சைருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் ஆகிய 5 கைதிகளும் தங்கள் சிறைக்கதவை உடைத்துக் கொண்டு, போர்வைகள், பெட்ஷீட்டுகள் மற்றும் லுங்கிகளைக் கொண்டு சுமார் 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவற்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் இருந்த மற்ற சிறைக்கதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.