மீண்டும் தோல்வி கண்டது வருத்தமளிக்கிறது – பாகிஸ்தான் கேப்டன்

முல்தான்,

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி கண்ட பின் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் அளித்த பேட்டியில் கூறியதாவது, மீண்டும் தோல்வியுற்றது வருத்தமளிக்கிறது. கடினமான உண்மை என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த அணி வெற்றிபெற அதற்கான வழிகளைத் தேடும். எங்களது அணி மனதளவில் பலவீனமானதாக இருந்ததாக நான் நினைக்கவில்லை.

ஆனால், இந்த ஆடுகளம் 3 நாள்களுக்குப் பிறகு உடையுமென எதிர்பார்த்தோம். அதனால்தான் நாங்கள் 3ஆம் நாளை அவ்வளவு நீட்டித்து விளையாடினோம். ஆனால், எப்படியாகினும் இறுதியாக நாங்கள் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழிகளை கண்டறிந்திருக்க வேண்டும். சமீபகாலமாக நாங்கள் இதை செய்யவில்லை.

ஆடுகளம் இரண்டு பக்கமும் சமமாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தால் 3,4-வது நாளில் சாதகமாக இருந்திருக்கும். 2022-க்குப் பிறகு தற்போதுதான் முல்தானில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆடுகளத்தை மேம்படுத்தும் நபர்களுடம் பேச எங்களுக்கு போதியளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியாக எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு தகவமைக்க தயாராக இருக்க வேண்டும்.

முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறது. நாங்கள் யார் ஒருவரையும் குறிப்பிட்டு குறை கூறமுடியாது. எல்லோரையும்தான் குறைகூற வேண்டும். நாங்கள் பேட்டிங் ஆட வந்த சமயம் 4-ம் நாளில் ஆடுகளத்தில் சில இடங்களில் வெடிப்புகள் காணப்பட்டன. அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் எங்களுக்கு பாதகமாகவும் அமைந்தன. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.