மும்பை இந்தியன்ஸ் அணியில் அந்த 1 இடத்திற்கு தான் பிரச்னை – யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

Mumbai Indians Potential Retetions: தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்களில் சற்றே வித்தியாசமானவர் என்றால் ரவிசந்திரன் அஸ்வின் என தயங்காமல் சொல்லலாம். அவரின் கைதேர்ந்த சுழற்பந்துவீச்சு, ஆட்ட நுணுக்கங்களை யாராலும் புறந்தள்ள முடியாது. அதேபோல், சினிமா சார்ந்த ஆர்வம், டைம்மிங் காமெடி என அஸ்வின் கலகலப்பான மனிதராகவும் அறியப்படுகிறார். இது பொதுவெளியில் தெரியவருவதற்கு முக்கிய காரணம் அவரின் தமிழ் யூ-டியூப் சேனல் எனலாம். 

Ashwin என்ற பெயரில் அவர் தமிழிலும், Ash Ki Baat என ஹிந்தியிலும் என தனித்தனியாக இரண்டு யூ-ட்யூப் சேனலை அஸ்வின் வைத்துள்ளார். இந்த ஹிந்தி சேனல் கடந்த மாதம்தான் தொடங்கப்பட்டது. தமிழ் யூ-ட்யூப் சேனலில் அஸ்வினுக்கு பலத்த வரவேற்பு இருக்கிறது எனலாம். அவருக்கு சுமார் 1.55 மில்லியன் Subscribers இருக்கின்றனர், அதாவது 15 லட்சத்து 500 பேர் எனலாம். அப்படியிருக்க அஸ்வின் எப்போது வீடியோ போடுவார் என எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கும்.

மும்பை இந்தியன்ஸ் யார் யாரை தக்கவைக்கும்?

அந்த வகையில், தற்போது ஐபிஎல் 2025 மெகா ஏலம் விதிகள் வெளியான பின்னர் அஸ்வினை கையில் பிடிக்க முடியவில்லை எனலாம். தமிழ், ஹிந்தி என தொடர்ந்து வீடியோக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஐபிஎல் மெகா ஏலம் விதிகளை விளக்குவதில் தொடங்கி, தற்போது எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைப்பார்கள் என கிரிக்கெட் வல்லுநர் மற்றும் பயிற்சியாளர் pdogg என்றழைக்கப்படும் பிரசன்னா அகோரம் உடன் சேர்ந்து தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். Potential Retention என்ற தலைப்பில் அஸ்வின் தொடர்ந்து தமிழில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், Potential Retention தலைப்பில் ஆறாவது எபிசோடில் மும்பை இந்தியன்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என அஸ்வின், Pdogg ஆகியோர் விவாதிக்கும் வீடியோ இன்று மாலை வெளியானது. இந்த வீடியோவில் முதலில் பேசிய Pdogg, மும்பை அணி ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகிய 5 வீரர்களை தக்கவைக்கும் எனவும், Uncapped வீரராக ரூ. 4 கோடி கொடுத்து இளம் வீரரான அன்சுல் கம்போஜை தக்கவைக்கும் எனவும் கூறினார். அதாவது, ஏலத்திற்கு போகும் முன்னரே ரூ.79 கோடியை செலவழித்து, மீதம் உள்ள ரூ.41 கோடியை வைத்து அந்த அணியால் பலமான அணியை ஏலத்தில் கட்டமைக்க முடியும் எனவும் கூறினார். 

அன்சுல் கம்போஜ் vs நேஹல் வதேரா

அதிலும் குறிப்பாக இஷான் கிஷன், டிம் டேவிட் உள்ளிட்டோரை மும்பை அணி நிச்சயம் விடுவிக்கும் என Pdogg தெரிவித்தார். மாறாக குவின்டன் டி காக், பில் சால்ட், ஜாஷ் இங்கிலிஸ், குர்னால் பாண்டியா, ஃபசல் ஹக் ஃபரூக்கி, அசித்தா ஃபெர்னான்டஸ் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என்றும் குவின்டன் டி காக், பில் சால்ட் கிடைக்கவில்லை என்றால் பென் டக்கெட்டை எடுக்கலாம் என்றும் Pdogg கணித்துள்ளார். 

இதில் அஸ்வின் தனது மாற்றுக் கருத்தை பதிவு செய்தார். அதாவது, மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரை நிச்சயம் எடுக்கும் என்றும் ஆனால் ரூ. 4 கோடி கொடுத்து அன்சுல் கம்போஜை எடுப்பதற்கு பதில் பேட்டர் நேஹல் வதேராவை எடுக்கலாம் என்றும் அஸ்வின் கூறினார். மேலும் அவர்,”முதல் 5 வீரர்களைில் பும்ராவை தவிர அனைவரும் பேட்டர் என்பதால் நேஹல் வதேராவையும் மும்பை ஏலத்திற்கு முன்பே தக்கவைத்துக்கொண்டால், ஏலத்தில் மீதம் உள்ள ரூ.41 கோடியை வைத்து நல்ல பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொள்ளலாமே…” என தனது கருத்தை பதிவு செய்தார். 

நேஹல் வதேரா வேண்டாம் என்றால் ஆகாஷ் மத்வாலை மும்பை அணி தக்கவைக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால், இதற்கு Pdogg,”அன்சுல் கம்போஜ் ரூ.4 கோடி வரை செல்வார். ஆகாஷ் மத்வால் அவ்வளவு தொகை போக மாட்டார்” என பதில் எழுப்பினார். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மும்பை அணி ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா இந்த 5 வீரர்களை தக்கவைப்பது உறுதி எனவும் ஆனால் யாரை எந்தெந்த தொகையில் தக்கவைப்பார்கள் என்பதே கேள்வியாக இருக்கும். 

நாளை சிஎஸ்கே வீடியோ

அதே நேரத்தில் Uncapped வீரரில் அஸ்வின் சொல்வது போல் நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வாலை தக்கவைப்பார்களா அல்லது அன்சுல் கம்போஜை தக்கவைப்பார்களா இல்லையெனில் Uncapped வீரர்களை ஏலத்தில் RTM பயன்படுத்தி தக்கவைப்பார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாளை சிஎஸ்கே எந்தெந்த வீரரை தக்கவைக்கும் என்பது குறித்த வீடியோ வெளியாகும் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.