மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை – பாந்த்ரா கிழக்கு பகுதியில் சனிக்கிழமை (அக்.12) அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் சுட்டுக் கொலை.
“பாபா சித்திக் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த குற்றச் செயலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை தரப்பட வேண்டும். அவர்களை விட்டு விடக்கூடாது. இந்த கடினமான சூழலில் பாபா சித்திக் குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியின் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து அவர் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாபா சித்திக் அனுமதிக்கப்பட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இருந்தும் அவர் உயிரிழந்தார்.
66 வயதான அவர் கடந்த 1976 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார். மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர். அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை நிர்மல் நகரில் உள்ள அவரது மகனின் அலுவலகத்துக்கு வெளியில் இருந்த போது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இரண்டு முதல் மூன்று ரவுண்டுகள் வரை சுடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை மூன்று பேர் நிகழ்த்தியுள்ளனர். அதில் இருவரை போலீஸார் பிடித்துள்ளனர். ஒருவர் மாயமாகி உள்ளார். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உயிரிழைப்பை அடுத்து மாகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கட்சி தரப்பு மற்றும் எதிரிக்கட்சிகள் தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.