திருச்சி: “நேற்று இரவு நடைபெற்ற ரயில் விபத்து குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானது,” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் இன்று (அக்.12) புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “நான் புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது வழக்கம். இதன்படி, தென்திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்துள்ளதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து, திருச்சியில் சார்ஜா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் விபத்து குறித்து நடைபெறும் விசாரணையின் முடிவில் தான் விபத்துக்கான காரணம் எதுவென்று தெரியவரும். திருவள்ளூரில் நடைபெற்றுள்ளது சிறு ரயில் விபத்து. பாஜக ஆட்சிக்கு முன்பு நடைபெற்ற ரயில் விபத்துகளை எடுத்து ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ரயில்வே துறையில் பல முன்னேற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக ரயில்வே நெட்வொர்க் கொண்டது நமது நாடு.
புல்லட் ரயில் தொடங்கி, வந்தே பாரத் ரயில் வரை ரயில்வே துறையில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. திருவள்ளூரில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து நாடாளுமனற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து சிறுபிள்ளைத்தனமானது. எல்லாவற்றிலும் அரசியல் செய்யக் கூடாது. எதிர்க்கட்சித் தலைவருக்கு இது அழகல்ல. ரயில் விபத்து சம்பவத்தில் இனி யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்று அவர் கூறினார்.