வியன்டியன்: லாவோஸில் பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு. காலிஸ்தான் பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ என அழைக்கப்படுகிறது. அதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பில் 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தான் பிரதமர் மோடி மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளனர். இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ, சிபிசி என்ற கனடா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது, “இதுவொரு சின்ன சந்திப்பு. நாம் இருவரும் இணைந்து செய்ய வேண்டிய வேலை உள்ளது என நான் தெரிவித்தேன்.
இருவரும் என்ன பேசினோம் என்பதை விரிவாக சொல்ல முடியாது. ஆனால், கனடா மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது கனடா அரசின் அடிப்படை பொறுப்பாகும். அதை நான் அப்படியே தொடர்வேன்” என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ரே நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றுக்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களின் ஈடுபாடு இருப்பதாக கடந்த ஆண்ட்ரு ட்ரூடோ குற்றச்சாட்டு வைத்தார். அதன் பிறகு இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
கடந்த 2020-ல் நிஜ்ஜாரை தீவிரவாதி என இந்தியா அறிவித்தது. அதே நேரத்தில் ட்ரூடோவின் குற்றச்சாட்டு அபத்தமானது என சொல்லி நிராகரித்தது. ஆசியான் மாநாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பயணம்.