டார்ஜிலிங் (மேற்கு வங்கம்): விஜயதசமியை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா கண்டோன்மென்ட்டில் ஆயுதங்களுக்கு பூஜை செய்தார்.
விஜயதசமி விழா இன்று (அக். 12) நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா கண்டோன்மென்ட்டில் ராணுவ வீரர்களுடன் இணைந்து ஆயுதங்களுக்கு பூஜை செய்து வழிபட்டார்.
கலச பூஜையைத் தொடர்ந்து, ஆயுதங்கள், வாகனங்கள், பீரங்கிகள், தகவல் தொடர்பு அமைப்புகள், நடமாடும் தளங்கள், ட்ரோன் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நவீன ராணுவ உபகரணங்களுக்கும் மாலை அணிவித்து பூஜை செய்து, பிரார்த்தனை மேற்கொண்டார். மேலும் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களின் நெற்றியில் வெற்றித் திலகமிட்டார்.
நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவரின் மத்தியிலும் நான் இங்கு ஆயுத பூஜை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆயுதங்களை வணங்கி, உரிய மரியாதையுடன் நடத்தப்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது நம் உயர்ந்த மரியாதை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.
ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நாம் அவற்றை வணங்குகிறோம். நாட்டில் உள்ள அனைத்து தொழில் வல்லுநர்களும் ஆண்டு முழுவதும் ஒரு முறை தங்கள் கருவிகளை வணங்குவதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். தீபாவளி மற்றும் வசந்த பஞ்சமி அன்று மாணவர்கள் தங்கள் பேனா மற்றும் புத்தகங்களை வணங்குகிறார்கள். இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை வணங்குகிறார்கள். நம் நாட்டில் பல குடும்பங்கள் விவசாயக் குடும்பங்களுடன் தொடர்புடையவை. ஆயுத பூஜை என்பது நமது கருவிகளை வழிபடுவது மட்டுமல்ல, நமது பணியின் மீதான மரியாதையும் கூட.
நீங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக இந்த சடங்கைப் பின்பற்றி வருகிறீர்கள். இன்றைய நாள் வெற்றி நாள். ராமர், ராவணனை கொன்ற நாள். அது மட்டுமல்ல மனித குலத்திற்கு கிடைத்த வெற்றி. நமது ராணுவ வீரர்களிடம் ராமரின் குணங்களை நான் காண்கிறேன். நமது தேசம் இன்றுவரை நமது ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை அவமதிக்கப்பட்ட போது தான் வேறு எந்த நாட்டையும் தாக்கியிருக்கிறதே தவிர வெறுப்பின் காரணமாக அல்ல. இந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயதசமி நல்வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.சிங், கிழக்கு கமாண்ட் லெப்டினன்ட் ஜெனரல் ராம் சந்தர் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.