புதுடெல்லி: பாஜக விவகாரங்களில் அதன் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் (ஆர்எஸ்எஸ்) நேரடியாகத் தலையிடுவதில்லை. எனினும் தேர்தல் சமயங்களில் பாஜகவின் பின்னால் இருந்து அதற்கு ஆதரவு திரட்ட உதவுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டவில்லை. இதற்கு, சொந்தக் கால்களில் நிற்கும் அளவுக்கு பாஜக முன்னேறியிருப்பதாக கட்சியின் தேசிய தலைவர் நட்டா கூறிய கருத்தும் தனிப்பட்ட நபராக பிரதமர் மோடி முன்னிறுத்தப்படு வதும் காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஹரியானாவில் மூன்றாம் முறையாக ஆட்சி அமைக்கும் பாஜகவின் வெற்றிக்கு ஆர்எஸ்எஸ் முக்கியப் பங்காற்றியிருப்பது தெரியவந்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட நிர்வாகிகள் ஹரியானாவின் பானிபட்டில் தொடர்ந்து 3 நாட்கள் தங்கியுள்ளார். தேர்தலுக்கு சற்று முன்பான இந்த முகாம்களில் பாஜகவின் வெற்றிக்காக பல வியூகங்கள் அமைக்கப்பட்டன. இதில் ஒன்றாக,காட்சிப் பதிவு மூலம் பாஜகவினரிடமும், பொதுமக்களிடமும் வாக்குறுதிகள் கொண்டு செல்லப்பட்டன. பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு இந்த வியூகங்கள் அடிப்படையாக இருந்துள்ளன.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தங்கள் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் பூத் ஸ்லிப் அளிப்பது உண்டு. இதன்மூலம், அவர்கள் மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவது வழக்கம். வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு போன் செய்து நினைவூட்டுவதும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் வழக்கம்.
இத்துடன் ஹரியானாவில் அதிக எண்ணிக்கையிலுள்ள ஜாட் சமூகத்தினரை ஒன்றிணைப்பதிலும் ஆர்எஸ்எஸ் பெரும் பணியாற்றி உள்ளது. ஹரியானாவின் பெரும்பாலான விவசாயிகள் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் டெல்லியில் நடத்திய போராட்டங்கள் பாஜக மீதான அவர்களின்கோபத்தை வெளிப்படுத்தியது. இதை மாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் எடுத்த நடவடிக்கைக்கு பலன் கிடைத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமையாமல் போனதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது. இதற்கு காஷ்மீர் பகுதியில் முஸ்லிம் கட்சிகளால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற பொதுவான கருத்து காரணம் ஆகும். எனவே, ஹரியானாவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, எதிர்வரும் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவுக்கு பலன் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.