புதுடெல்லி: இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி வரும் அக்.17-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தின் பஞ்ச்குலாவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, பதவியேற்பு விழாவுக்கு முன்பாக நடைபெற இருக்கும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், நயாப் சிங் சைனி பாஜகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தப் பதவியேற்பு விழா ஏற்பாடுகளை கண்காணிக்க மாநிலத் தலைமைச் செயலாளரால் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பஞ்சகுலா மாவட்ட ஆணையர் தலைமை தாங்குவார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் மோகன் லால் கட்டாருக்கு பதிலாக ஹரியானா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டவர் நயாப் சைனி. நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நயாப் சைனி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை கட்சி சுட்டிக்காட்டியிருந்தது. இவர் மாநிலத்தின் முக்கிய வாக்கு வங்கியான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்.
இதனிடையே, இந்த வாரத்தின் தொடக்கத்தில், நயாப் சைனி மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் டெல்லியில் மூத்த பாஜக தலைவர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவையும் நயாப் சைனி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் பத்தாண்டு கால ஆட்சி மீதான எதிர்ப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போன்றவைகளையும் மீறி ஹரியானாவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது. மாநிலத்திலுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மீண்டு வர வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வென்றிருந்தது.
இவை தவிர கடந்த 2019 முதல் 2024 வரை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த ஜெஜெபி கட்சி படுதோல்வியடைந்தது. தனித்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி ஹரியானாவில் தனது கணக்கை தொடங்கவில்லை. ஐஎன்எல்டி கட்சி இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. சாவித்ரி ஜிண்டால் உட்பட மூன்று சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளனர்.