Baba Siddique: அஜித் பவார் கட்சி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

மும்பையில் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனது மகனுடன் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இரவு 9.15 மணிக்கு பாபா சித்திக் மும்பை பாந்த்ராவில் உள்ள நிர்மல் நகரில் இருக்கும் தனது மகன் சீசன் சித்திக் அலுவலகத்தில் இருந்தார். அந்நேரம் துர்கா சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதால் பட்டாசு போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மூன்று பேர் பாபா சித்திக் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் சுட்ட தோட்டா பாபா சித்திக் நெஞ்சு மற்றும் வயிற்றில் பட்டது. உடனே சுருண்டு விழுந்த பாபா சித்திக் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்.

மகனுடன் பாபா சித்திக்

இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் அஜித் பவாருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக சம்பவ இடத்தில் இருந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக பாந்த்ரா போலீஸார் தெரிவித்தனர். பாபா சித்திக்கிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அச்சுறுத்தல் இருந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து அவருக்கு மாநில அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ளது.

இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ”அடையாளம் தெரியாத சிலர் பாபா சித்திக்கை சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்”என்று தெரிவித்தார். பாபா சித்திக் 1999ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மும்பை பாந்த்ரா பகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். பாந்த்ரா பாய் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பாபா சித்திக் 48 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்துவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தான் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

துப்பாக்கிச்சூடு நடந்த இடம்

காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. பாபா சித்திக் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் பாலிவுட் பிரபலங்களுக்கு வைக்கும் இப்தார் பார்ட்டி மிகவும் பிரபலம் ஆகும். இதில் சல்மான் கான், ஷாருக்கான், சஞ்சய் தத் உட்பட பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம். பாபா சித்திக் மறைவுக்கு மும்பை காங்கிரஸ் கட்சி தலைவர் வர்ஷா கெய்காட் ஆழ்ந்த இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார். மும்பையில் என்ன நடக்கிறது என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், ஆம் ஆத்மி கட்சியின் பிரீத்தி சர்மா உட்பட பலரும் பாபா சித்திக் கொலைக்கு கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் பரம்ஜித் சிங் கூறுகையில்,”சம்பவம் இரவு 9.30 மணிக்கு நடந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து பிடிபட்ட இரண்டு பேரிடம் விசாரித்து வருகிறோம்”என்றார். துப்பாக்கிச்சூட்டில் பாபா சித்திக்குடன் இருந்த ஒருவரும் காயம் அடைந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரிஜ் மோகன் இது குறித்து கூறுகையில்,”பாபா சித்திக் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒருபோதும் தெரிவித்ததில்லை”என்றார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் சாமானிய மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள் என்று சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.