Doctor Vikatan: என் பெற்றோருக்கு 75 வயதாகிறது. தனியே வசிக்கும் அவர்கள் அவர்களுடைய வேலைகளைச் செய்துகொண்டு நன்றாகவே இருக்கிறார்கள். முதுமையில் அவர்களை இப்படி அவர்களின் வேலைகளைச் செய்துகொண்டு வாழ அனுமதிப்பது சரியா… அல்லது குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஓய்வெடுக்க வேண்டும் எனச் சொல்வது சரியா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் கோகிலா விஜயன்.
இந்த விஷயத்தில் மூன்று விஷயங்களைப் பொறுத்து நாம் முடிவெடுக்க வேண்டும். இண்டிபெண்டென்சி (independency), செமிஇண்டிபெண்டென்சி (semi independency) மற்றும் டிபெண்டென்சி (dependency) மூன்றை குறிப்பிடலாம்.
தன்னால் சுயமாக எல்லா வேலைகளையும் செய்துகொள்ள முடியும் என ஒருவர் நம்பினால் அவரை அதற்கு அனுமதிக்கலாம். சில வேலைகளை அவர்கள் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்ற நிலையில் அவர்களை அவற்றைச் செய்ய வைக்கலாம்.
சிலர் சில வேலைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள். வயதான காரணத்தால் மாடி ஏறி, இறங்க முடியாதவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு மாடிப்படிகளில் ஏறி, இறங்க ஆசையிருக்கும். அவர்களுக்கு பத்து பத்து படிகளாக ஏற பயிற்சி கொடுக்கலாம். அப்படி மெல்ல மெல்ல அவர்களைப் பழக்கலாம்.
இதற்கடுத்த நிலையில் நிச்சயம் யாரையோ சார்ந்துதான் இருக்க வேண்டியிருக்கும்.
வயதானவர்களைப் பொறுத்தவரை அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம், அக்கறை காட்டுகிறோம் என்ற பெயரில் அவர்களால் செய்ய முடிகிற வேலைகளைக்கூட செய்ய விடாமல் தடுக்க வேண்டாம். என்னவெல்லாம் செய்தால் அவர்களது உடலை ஸ்ட்ராங்காக மாற்ற முடியும் என பார்த்து அதை அனுமதிப்பதுதான் அவர்களுக்கு நீங்கள் செய்கிற நல்லது. வயதான காலத்தில் அவர்கள் ஸ்ட்ராங்காக இருந்தால்தான் அவர்களுடன் இருப்பவர்களால் நிம்மதியாக இருக்க முடியும்.
”எங்கப்பாவுக்கு வயசாயிடுச்சு… ஆனாலும், அவரே நடந்து வருவார்” எனச் சொல்வதற்கும், ”அப்பாவுக்கு வயசாயிடுச்சு… நான்தான் கூட்டிட்டு வரணும்” என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. இந்த இடத்தில் உங்கள் அப்பாவை ஸ்ட்ராங்காக மாற்றும் வேலையைச் செய்ய வேண்டுமே தவிர, அவரைக் கூட்டிக்கொண்டு வரும் நிலைக்குக் கொண்டுவரக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, உங்கள் பெற்றோரின் நிலையைப் பொறுத்து இதில் முடிவெடுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.