Sanju Samson : 'சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே!' – வங்கத்தை சூறையாடிய சாம்சன் புயல்!

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று அடைமழை. இன்று போட்டி நடைபெறுமா என்பதே சந்தேகமாக இருந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக போட்டி நடந்துவிட்டது. வான்மழை நின்றாலும் சாம்சன் பேட்டிலிருந்து பொழிந்த சிக்சர் மழை ஒட்டுமொத்த கூட்டத்தையும் குதூகலிக்க செய்திருக்கிறது. இந்திய அணிக்காக தன்னுடைய கரியரின் ஆகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி தன் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சாம்சன்

46 பந்துகளில் 111 ரன்களை சாம்சன் அடித்திருந்தார். 86 ரன்களை பவுண்டரிகளிலும் சிக்சர்களிலுமே அடித்திருந்தார். ஆரம்பத்திலிருந்தே அதிரடிதான். முதல் 5 பந்துகளில் மட்டும்தான் அமைதி. அதன்பிறகு வீரியமாக கரையை கடக்கும் புயலைப் போல வங்கதேச பௌலர்களை திணறடித்திருந்தார். டஸ்கின் அஹமது வீசிய இரண்டாவது ஓவரிலேயே தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை அடித்திருந்தார். முஷ்டபிஷூரின் ஓவரில் ஸ்லோயர் ஒன்னில் அற்புதமாக ஒரு சிக்சரை அடித்திருந்தார். ஸ்பின்னரான ரிஷாத் தான் அய்யோ பாவம். அவர் வீசிய முதல் பந்திலிருந்தே அட்டாக்தான். அவரை சாம்சன் எதிர்கொண்ட 10 பந்துகளிலேயே 47 ரன்களை அடித்திருந்தார். இதில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக அவர் அடித்த 5 சிக்சர்களும் அடக்கம்.

கண்ணை மூடிக்கொண்டு பேட்டை சுற்றியதை போன்ற இன்னிங்ஸாக இது தோன்றும். ஆனால், அப்படியில்லை. பௌலர்களையும் பீல்ட் செட்டப்களையும் மிகச்சிறப்பாக கணித்து தனது டெக்னிக்கல் திறனின் ஆழத்தை வெளிக்காட்டும் விதத்தில் சாம்சன் ஆடிய இன்னிங்ஸ் இது. பவர்ப்ளேக்குள் பீல்டர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை சரியாக கணித்து ஒவ்வொரு ஷாட்டையும் ஆடியிருந்தார். டஸ்கின் அஹமது வீசிய முதல் ஓவரில் கவருக்க மிட் ஆப்புக்கும் இடையில் அவ்வளவு அழகாக இடைவெளியை கண்டடைந்து பவுண்டரி அடித்திருந்தார். அதேமாதிரி, ஷார்ட் பைன் லெக்கையும் ஸ்கொயர் லெக்கையும் உள்ளே வைத்து கொஞ்சம் ஷார்ட்டாக வீசப்பட்ட பந்துகளையும் கச்சிதமாக பீல்டர்களின் தலைக்கு மேலேயே பவுண்டரியாக்கியிருந்தார்.

முஷ்டபிஜூருக்கு எதிராக ஸ்லோயர் ஒன்னை சிக்சராக்கிய விதமெல்லாம் அடிபொலி. வெறும் 116 கி.மீ வேகத்தில் கொஞ்சம் பேக் ஆப் தி ஹேண்டில் ஸ்பின்னரை போல சுழற்றி வீசினார். அதை அப்படியே க்ரீஸிலிருந்து இறங்கி வந்து கச்சிதமாக பேட்டில் வாங்கி சிக்சராக்கினார். ரிஷாத்தின் ஓவரில் 5 சிக்சர்களை அடித்ததெல்லாம் மாயாஜாலம். லாங் ஆன், லாங் ஆப்போடு லெக் சைடில் இரண்டு பீல்டர்களை வைத்து ஆப் சைடில் ஓப்பனாக வைத்து ரிஷாத் மிடில் & லெக் ஸ்டம்பில் டைட்டாக வீசினார். எப்பேற்பட்ட திறன் கொண்ட பேட்டரையும் திணற வைக்கும் லைன் & பீல்ட் செட்டப் இது. ஆனால், தனது கால்களை சிறப்பாக பயன்படுத்தி இறங்கி வந்து அட்டகாசமாக நேராக சிக்சர்களை பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள். மெஹதி ஹசனின் ஓவரில் பவுண்டரி அடித்து 40 வது பந்தில் சதமடித்தார்.

டி20 க்களில் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இது. 111 ரன்களை அடித்திருந்த நிலையில் முஷ்டபிஜூரின் ஷார்ட் பாலில் சாம்சன் கேட்ச் ஆகியிருந்தார். ஒட்டுமொத்த ஹைதராபாத் மைதானமுமே எழுந்து கைத்தட்ட தலைநிமிர பேட்டை உயர்த்திக் காட்டி பெவிலியனுக்கு திரும்பினார் சாம்சன்.

சாம்சனுடைய கரியரில் இது ஒரு அதி முக்கியமான இன்னிங்ஸ். உள்ளூர் போட்டிகளிலும் ஐ.பி.எல் லிலும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு போராடி தேர்வாவார். ஆனால், இந்திய அணியில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் சொதப்புவார். விக்கெட்டை அநாமத்தாக விரயம் செய்வார். அணியிலிருந்து ட்ராப் செய்யப்படுவார். அப்படியொரு நிலையில்தான் இப்போது வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் இந்திய அணி சாம்சனை இன்னும் கூடுதலாக நம்பியது.

சாம்சன்

தொடருக்கு முன்பாகவே சாம்சன் தான் அணியின் ஓப்பனர் என கேப்டன் சூர்யா அறிவித்தார். சாம்சனின் டி20ஐ கரியரில் இதற்கு முன் 5 இன்னிங்ஸ்களில்தான் ஓப்பனிங் இறங்கியிருக்கிறார். பெரிய ரெக்கார்ட் எல்லாம் இல்லை. அப்படியிருக்க இந்த முறை அவருக்கு கிடைத்தது பெரிய வாய்ப்பு. ஆனாலும் முதல் இரண்டு போட்டிகளில் வழக்கம்போல சொதப்பினார். முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்தே 39 ரன்களைத்தான் எடுத்திருந்தார். இந்நிலையில்தான் தொடரின் கடைசிப் போட்டி சாம்சனுக்கு வாழ்வா சாவா போட்டியாக மாறி நின்றது. சாம்சனுக்கு முன்னால் இருந்தது இமாலயச் சவால். இத்தனை நாட்கள் தன் மீது வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களுக்கான பதிலை இந்தப் போட்டியில் அவர் அளிக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. இதிலும் சொதப்பினால் சாம்சன் பெரிய கேள்விக்குறியை மட்டுமே சுமக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால், சாம்சன் இந்த சவாலில் வென்றுவிட்டார். மறக்கவே முடியாத ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்துவிட்டார். தன்னுடைய திறன் என்னவென்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்.

காரம் உச்சிமண்டையில் ஜிவ்வென ஏறும் அளவுக்கு ஹைதராபாத்தில் ஒரு முரட்டு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார் சாம்சன். போயப்பட்டி ஸ்ரீனுவுடன் தனது அடுத்தப் படத்தை இன்று அறிவித்திருக்கிறார் பாலய்யா. வங்கத்தை சூறையாடிய சாம்சனின் ருத்ரதாண்டவத்தை பார்த்துவிட்டு பாலய்யாவே தனக்கு உதவியாக சாம்சனை கேமியோ செய்ய அழைத்தாலும் ஆச்சர்யமில்லை. அடி அந்த மாதிரி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.