தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விக்கிரவாண்டி வி.சாலையில் அக்டோபர் 27 ஆம் தேதி நடத்தவிருக்கிறார் விஜய். இந்நிலையில் இந்த மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களை கட்சி சார்பில் இப்போது அறிவித்திருக்கிறார்.
முதலில் மாநாட்டை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி நடத்தவே த.வெ.க சார்பில் விழுப்புரம் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். 33 நிபந்தனைகளுடன் காவல்துறையின் அனுமதி வழங்கினாலும் மாநாட்டை நடத்த போதிய அவகாசம் இல்லாததால் அந்த தேதியில் அவர்களால் மாநாட்டை நடத்த முடியவில்லை. இந்நிலையில்தான், அக்டோபர் 27 ஆம் தேதி மாநாட்டை நடத்த திட்டமிட்டார்கள். இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி நமது கொள்கைகளை முழங்கும் அரசியல் திருவிழாவாக மாநாடு இருக்கும் எனக் கூறி அக்டோபர் 27 ஆம் தேதி மாநாட்டை நடத்தவிருப்பதை விஜய்யே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அடுத்த சில நாட்களிலேயே பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழகம் முழுவதுமிருந்தும் நிர்வாகிகள் அழைத்து வரப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், விரைவிலேயே மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அறிவிக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான், இன்று மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களை பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்திருக்கிறார். அதன்படி, 27 விதமான குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 850 க்கும் அதிகமான நிர்வாகிகளை ஒருங்கிணைப்புக் குழுவில் பணிக்காக அமர்த்தியிருக்கிறார்கள். முழு மாநாட்டுக்குமான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஆனந்த்தும் ஒருங்கிணைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான பரணி பாலாஜியும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
வரவேற்புக் குழு, தீர்மானக்குழு நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகன நிறுத்தக் குழு, மகளிர் பாதுகாப்புக் குழு, அவசரகால உதவிக்குழு என 27 விதமான குழுக்களை அமைத்திருக்கிறார்கள். மழைக்காலம் என்பதால் வானிலை தகவல் பகிர்வு குழு என்று ஒரு குழுவை உருவாக்கி அதிலும் தலைவர், ஒருங்கிணைப்பாளரோடு 6 உறுப்பினர்களை நியமித்திருக்கிறார்கள். மாநாடு நடக்கும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைத்து கட்சியின் கொடியை விஜய் ஏற்றி வைக்கவுள்ளார். கொடிக்கம்பம் அமையவுள்ள இந்த இடத்தை மட்டும் த.வெ.க சார்பில் சொந்தமாக வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள். இதற்காக கொடிக்கம்பம் அமைப்புக் குழு என்று ஒரு குழுவையும் தனியாக அமைத்திருக்கிறார்கள்.
மாநாட்டின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்குமான அத்தனை பணிகளுக்குமே குழு அமைத்திருக்கிறார்கள். ஆனால், மாநாட்டில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு உணவளிப்பதற்கு தனியாக ஏதேனும் குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. உபசரிப்புக் குழுவென்று ஒன்று அமைத்திருக்கிறார்கள். ஆனால், அதில் 30 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆக, அது மாநாட்டில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்களுக்கான உபசரிப்புக் குழுவாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.