தெஹ்ரான்: இஸ்ரேலுக்கு உதவி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.
கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 180 ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் அழித்தது. சில ஏவுகணைகள் தரையில் விழுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.
இந்த தாக்குதலுக்காக ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்படி ஈரானின் எண்ணெய் கிணறுகள், மின் விநியோக கட்டமைப்பு, அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகளின் வான் எல்லைகள் வழியாக ஈரானின் பல்வேறுபகுதிகள் மீதும் ஒரே நேரத்தில்தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் வியூகம் வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள சவுதி அரேபியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் வான்பரப்பை பயன்படுத்தி ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், ஈரானின் அணு ஆயுத தளங்கள், எண்ணெய் கிணறுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எனவே ஈரானின் இதர முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாக தெரிகிறது.
இந்த சூழலில் ஈரான் வெளியுறவுத் துறை, மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுக்கு தூதரகங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது. “இஸ்ரேலுக்கு உதவி செய்யும் நாடுகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ஏதாவது ஒரு நாடு தனது வான்பரப்பை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்த அனுமதித்தால் அந்தநாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்’’ என்று ஈரான்வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்திய வீரர்களின் பாதுகாப்பு? இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளின் எல்லைப் பகுதியில்ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 600 பேர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர்.
அமைதிப் படை முகாமிட்டுள்ள பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழலில் ஐ.நா. அமைதிப் படை முகாமிட்டுள்ள லெபனானின் நகோரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘‘ஐ.நா. அமைதிப் படை முகாம் மீது தாக்குதல் நடத்தக்கூடாது’’ என்று அமெரிக்கா, இந்தியா உட்படபல்வேறு நாடுகள் இஸ்ரேல் அரசை கண்டித்து உள்ளன.