டெஹ்ரான்,
இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்படுகிறது. இதற்கிடையே ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் போரை அறிவித்தது. அதன் ஒருபகுதியாக சமீபத்தில் இஸ்ரேல் ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது.
இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானைச் சேர்ந்த 6 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனது எக்ஸ் வலைதளத்தில், “ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகள் மீது பரந்த புதிய தடைகளை நாங்கள் அறிவிக்கிறோம், ஈரானிய ஆட்சி அதன் ஸ்திரமின்மை நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தக்கூடிய ஆதாரங்களை மேலும் மறுக்கிறோம். நாங்கள் 16 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளோம். ஈரானிய பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் 23 கப்பல்களைத் தடை செய்துள்ளோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதனை ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.