திருவள்ளூர் / சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்தஇடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விபத்து குறித்து விசாரிக்க 6 அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் – மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு நேற்று முன்தினம் காலை10.30 மணிக்கு பாக்மதி விரைவு ரயில் புறப்பட்டது. ஜோலார் பேட்டை, அரக்கோணம், சென்னை – பெரம்பூர் வழியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. இரவு 8.27 மணியளவில், கும்மிடிப்பூண்டி, கவரைப் பேட்டை ரயில் நிலையம் அருகே தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பிரதான தண்டவாள பாதையிலிருந்து விலகி, லூப்லைனில் சென்றது.இதனால், அந்த பாதையில் 3 நாட்களாக நின்று கொண்டிருந்த சரக்குரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 22 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இதில், 6 பெட்டிகள் கவிழ்ந்து முழுமையாக சேதமடைந்தன. 19 பேர் காயமடைந்தனர். ஒருரயில் பெட்டியின் கீழ் பகுதியில் காஸ் சிலிண்டர் கசிந்ததால், தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தெற்கு ரயில்வே அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள்,தீயணைப்பு வீரர்கள், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில், 3 பேர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், 6 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் நேற்று முன்தினம் இரவே சிகிச்சை பெற்று திரும்பினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், எஸ்.பி. சீனிவாசபெருமாள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், வருவாய்த் துறையினர்,கவரைப்பேட்டை பொதுமக்களின் ஒத்துழைப்போடு ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரையும் மீட்டு, கவரைப்பேட்டையில் உள்ள 3 தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு குடிநீர், உணவுப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது.
பிறகு, நள்ளிரவில் அரசு பஸ்கள் மூலம் ரயில் பயணிகள் 1800-க்கும் மேற்பட்டோர், பொன்னேரி ரயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து சிறப்பு மின்சார ரயில்கள் மூலம் சென்னை- சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து, நேற்று அதிகாலை 4.45 மணிக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம், சிறப்பு ரயில் மூலம் பயணிகளை தர்பங்கா உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தது.
நேற்று முன்தினம் இரவு முதல், தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டோர் 5 பொக்லைன் எந்திரங்கள், 140 டன் எடையை சுமக்கும் 2 கிரேன்கள் உள்ளிட்டவை மூலம் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி, சேதமடைந்த ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் ரயில்வே தென்மண்டல பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறும்போது,’’விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும். கவாச் கருவி பயன்படுத்துவதற்கும் இந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றார்.
இதற்கிடையே, இந்த விபத்து குறித்து விசாரிக்க 6 அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விரைவில்ஆய்வு தொடங்கி, ரயில்வே துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இதில் இயந்திரவியல், இயக்கவியல், தண்டவாள பராமரிப்பு துறை,சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆகியதுறைகளை சேர்ந்த உயரதி காரிகள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட ரயில்வே உயரதிகாரிகள்ரயில் பெட்டிகளை அகற்றும் பணி,ரயில் தண்டவாளங்கள் சீரமைப்புபணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். தடம் புரண்டு ரயில் பெட்டிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து நேற்று இரவு முதல் ரயில் சேவை படிப்படியாகத் தொடங்கியது.
என்ஐஏ ஆய்வு: திருவள்ளூர் மாவட்டம் வழியாக செல்லும் ரயில் பாதைகளில் சமீபத்தில் 3 சம்பவங்கள் நடைபெற்றன. பொன்னேரி ரயில் நிலையம் அருகே, கடந்த மாதம் முதல் வாரத்தில், தண்டவாள இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டு சிதறிக் கிடந்தன. இதையடுத்து, கடந்தமாதம் 21-ம் தேதி, பொன்னேரி– அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில், 4 இடங்களில் பாதையை மாற்றிவிடும் இணைப்பு பெட்டியின், போல்டுகள் கழற்றப்பட்டிருந்தன. இந்த சம்பவங்கள் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதே மாவட்டத்தில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளாகி இருப்பது, ஏதாவது சதி வேலை நடக்கிறதா? எனசந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மோப்ப நாய்களுடன் உதவியுடன் நேற்று வந்து ஆய்வு மேற்கொண்டனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த‘ஸ்விட்ச் பாயின்ட்’ போல்ட்கள் கழற்றப்பட்டு இருந்தன. இது வழக்கத்துக்கு மாறாக இருந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை கொண்டு சென்றுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று முன்தினம் இரவு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ரயில் ஓட்டுநருக்கு காயம்: பாக்மதி விரைவு ரயிலில் ஓட்டுநராக சுப்பிரமணியும், உதவி ஓட்டுநராக ராம் அவதார் மீனாவும் செயல்பட்டனர். சரக்கு ரயில் மீது மோதுவதற்கு முன்பாக ரயிலின்வேகத்தை குறைத்து உயிரிழப்பைதடுத்ததில் ஓட்டுநர் சுப்பிரமணி முக்கிய பங்காற்றினார். இந்த விபத்தில் உதவி ஓட்டுநர் ராம் அவதார் மீனாவுக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது.