மதுரை: மெரினா சம்பவத்தை மறைக்க கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
மதுரையில் பல்வேறு இடங்களில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று (அக்.13) நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் பேராதாரவுடன் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அக்.15 வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கையை 11 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பாஜகவில் நடைபெறுவது போல் வேறு எந்தக்கட்சியிலும் ஜனநாயக முறைப்படி உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை.
தமிழகத்தில் ரயில் விபத்து குறித்து மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பொய்ப் பிரச்சாரத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் திட்டமிட்டு செய்து வருகின்றனர். மெரினாவில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக கூட்டணி கட்சிகள் பேசினார்களா?
மெரினாவில் என்ன நடந்தது. மெட்ரோ ரயில், பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை. தண்ணீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதியில்லை. இதனால் 5 பேர் உயிரிழந்தனர். மெரினா சம்பவத்தை மறைக்க திமுக கூட்டணி ரயில் விபத்தில் நாடகமாடி வருகிறது.
இந்திய ரயில்வே துறை கடந்த 10 ஆண்டுகளில் பிரம்மாண்ட அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு ஆண்டில் புல்லட் ரயில் இயக்கப்படும். திமுக, காங்கிரஸ் ஆட்சிகளில் ரயில் நிலையங்களுக்கு ஏன் வந்தோம்? என்ற நிலை இருக்கும். இப்போது நிலைமை அப்படியில்லை. ரயில் நிலையங்கள் சுத்தமாக, சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது.
கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் மொத்த ரயில்வேயும் வேலை செய்யவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் இண்டியாக கூட்டணி கட்சிகள் இறங்கியுள்ளன. என்ஐஏ விசாரணையில் ரயில் விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும்.
திமுகவின் 3 ஆண்டு ஆட்சி முழுக்க முழுக்க வேதனையான ஆட்சி. பல்வேறு கட்டணங்களையும், வரிகளையும் உயர்த்திவிட்டனர். எந்தப்பக்கம் திரும்பினாலும் மனமகிழ் மன்றங்கள் உள்ளன. போதைப் பொருளை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாநாடு நடத்தலாம். நடிகர் விஜய்யின் செயல்பாடு, கொள்கைகளை பார்த்து தான் மக்கள் முடிவெடுப்பார்கள். அரசியலில் நிரந்தர எதிரி, நண்பன் இல்லை என திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். கூட்டணி தொடர்பாக தேசிய தலைமை தான் முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.