புதுடெல்லி: காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா 16-ம் தேதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் வரும் 17-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. துணை நிலை ஆளுநர் 5 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வார். இதற்கிடையில், சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 5 பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந் தனையற்ற ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலும் தேசிய மாநாட்டுக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியும். எனினும், தேசிய மாநாட்டு கட்சிக்கு காங்கிரஸ் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது காரா நேற்று தெரிவித்தார்.
காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா நேற்று முன்தினம் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து உரிமைகோரினார்.
அப்போது கட்சி எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் உமர் அப்துல்லாவை முதல்வராக தேர்ந்தெடுத்த கடிதத்தையும் அவர் வழங்கினார். இதையடுத்து தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உமர் அப்துல்லா வரும் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தற்போது யூனியன் பிரதேசமாக இருப்பதால், புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆவணங்களை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா,குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார். அதன்பின்னர் குடியரசுத்தலைவர் ஆய்வு செய்த பிறகுமத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்களை அனுப்பிவைப்பார். இந்த நடைமுறைகள் 2 அல்லது 3 நாட்களில் முடிந்து விடும் என்று தெரிகிறது. காஷ்மீரில் உமர் அப்துல்லா கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவில் நயாப் சிங்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 3-வது முறையாக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திய தேசியலோக்தளம் 2 இடங்களை பெற்றது. ஜனநாயக ஜனதா கட்சி, ஆம்ஆத்மி ஆகிய கட்சிகள் படுதோல்வி அடைந்தன. ஆனால், ஹரியானாவில் யார் முதல்வர் என்பது குறித்து பாஜக மேலிடம் அறிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், ஹரியானாவில் வரும் 17-ம் தேதி நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று பாஜக மேலிடம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பதவியேற்பு விழா ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பாஜகஆளும் மாநில முதல்வர்கள் மற்றும்முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று கூறும்போது, ‘‘ஹரியானா முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க ஒப்புதல் கிடைத்துள்ளது. அன்றைய தினம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பார்கள்’’ என்றார். இதற்கிடையில், பஞ்ச்குலா போலீஸ் துணை ஆணையர் யாஷ் கார்க் கூறும்போது, ‘‘பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக மாவட்ட அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.