Suryakumar Yadav captaincy record: இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது. கடைசியாக தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் முதல் பதிப்பில் கோப்பையை வென்று இருந்தது. அதன் பிறகு இந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் கோப்பையை வென்றது. இந்த தொடருக்குப் பிறகு டி20 உலக கோப்பையில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். அவரை தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் சமயத்தில் சில தொடர்களில் மட்டும் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா தான் அணியை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ரோஹித் சர்மா அணியை வழிநடத்தினர். இந்த நிலையில் ரோகித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியா தான் முழுநேர டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து சூரியகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கௌதம் கம்பீர் தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு இந்த மாற்றம் வந்தது. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறுவதால் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
சூரியகுமார் யாதவ் கேப்டன்சி சாதனை
சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றலில் இருந்து பல சாதனைகளை செய்து வருகிறார். இலங்கையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கிளீன் ஸ்வீட் செய்து கோப்பையை வென்றார். அதன் பிறகு தற்போது நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரையும் 3- 0 ஜீரோ என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். சூரியகுமார் யாதவ் அணிக்கு வந்த ஆரம்ப கட்டங்களில் முக்கிய வீரர்கள் இல்லாத சமயத்தில் அணியை வழிநடத்தி உள்ளார். 2023 உலக கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை வழி நடத்தினார். அந்த தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதுவரை சூரியகுமார் யாதவ் 13 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து அதில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார், இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளார். இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் முன்பு சூர்யகுமார் யாதவ் தனது உள்ளூர் அணியான மும்பையை ரஞ்சி டிராபியில் வழிநடத்தியுள்ளார். அதில் கேப்டனாக 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் 1 வெற்றி மற்றும் 3 போட்டி டிராவில் முடிந்துள்ளது. சையத் முஷ்டாக் அலி டிராபியில் 16 ஆட்டங்களில் மும்பைக்கு கேப்டனாக இருந்து 63 சதவீத வெற்றியை எட்டியுள்ளார். ஐபிஎல்லில் எந்த அணிக்கும் முழு நேர கேப்டனாக சூர்யா இருந்ததில்லை. முன்பு ரோஹித் சர்மாவின் தலைமையில் விளையாடிய சூர்யா, தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி வருகிறார்.