புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை துபாய் காவல் துறை சவுரப் சந்திரகரை கைது செய்தது. இந்நிலையில் அவரை இந்தியா அழைத்து வரும் நடவடிக்கையை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகிய இருவர் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர். அதன் மூலம் அவர்கள் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர் என்றும் சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இவர்கள் ரூ.500 கோடி வழங்கியதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இவ்விருவருக்கும் தாவூத் இப்ராகிம் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமலாக்கத் துறையின் கோரிக்கையையடுத்து, துபாய் காவல் துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரவி உப்பாலை கைது செய்தது. அதேபோல், சவுரப் சந்திரகரை வீட்டுக் காவலில் வைத்தது.
துபாயில் கைது: இந்நிலையில், சவுரப் சந்திரகரையும் கைது செய்ய அமலாக்கத் துறை சில தினங்களுக்கு முன்புநோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து தற்போது துபாய் காவல் துறை சவுரப் சந்திரகரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில், அவரை இந்தியா அழைத்து வந்து விசாரிக்கும் முயற்சியை அமலாக்கத்துறை துரிதப்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறை விரைவில் துபாய் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.