'நிறைய தோல்விகளை பார்த்துவிட்டேன்…' – வங்காளதேசத்திற்கு எதிராக சதம் விளாசிய சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

ஐதராபாத்,

வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது. குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்தியா, ஐதராபாத்தில் நேற்று நடந்த கடைசி டி20 ஆட்டத்தில் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில், கேப்டன் சூர்யகுமார் யாதவ்-சஞ்சு சாம்சன் ஜோடி, வங்காளதேச அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தது. சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள்(8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) விளாசினார். பின்னர் மஹ்முதுல்லாவின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

மறுபுறம் அதிரடியாக ஆடி ரன் மழை பொழிந்த சஞ்சு சாம்சன், 47 பந்துகளில் 111 ரன்கள்(11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய அவர், “நான் நிறைய தோல்விகளை பார்த்துவிட்டேன். அதனால் அழுத்தம் மற்றும் தோல்விகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். நம்மால் என்ன செய்ய முடியும் என்பது தெரிந்தும், அதை முழுமையாக கொடுக்க முடியாதபோது மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்படும். அணியில் உள்ள அனைவரும், நான் சரியாக ஆடாதபோதும் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தனர். எனது ஆட்டத்தின் மூலம் அணியினர் மகிழ்ச்சி அடைந்ததை பார்த்து நானும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.