புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டம் நங்கல் நகரைச் சேர்ந்த விகாஸ் பிரபாகர் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) நிர்வாகியாக இருந்தார். கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தனது இனிப்பு கடையில் இருந்த பிரபாகர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
இவர்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு பஞ்சாப் போலீஸாரிடமிருந்து என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதின்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.
அதில், “விகாஸ் பிரபாகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர், தப்பி ஓடிய 2 பேர் மற்றும் பிகேஐ தலைவர் வாதவாசிங் ஆகிய 6 பேர் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஆயுத சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்களை வழங்கியவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது” என கூறப் பட்டுள்ளது.