மும்பை: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் கொலையை அரசியலாக்க வேண்டாம் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அஜித் பவார் கூறியதாவது: “மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறோம். இந்த கொடூர சம்பவத்தை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இது வெறும் அரசியல் ரீதியான இழப்பு மட்டுமல்ல, இது எங்கள் அனைவரையும் உலுக்கியுள்ள தனிப்பட்ட இழப்பு. இந்த கொடூர நிகழ்வை யாரும் தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் லாபங்களுக்காக அடுத்தவர்களின் வலியை பயன்படுத்திக் கொள்ள இது நேரமல்ல. இப்போதைக்கு சரியான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
மிகப்பெரிய துயரத்தில் இருக்கும் பாபா சித்திக்கின் குடும்பத்தினரின் துக்கத்தில் நாமும் பங்கெடுப்போம். இந்த துயரத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து சந்தர்ப்பவாத குரல்களை எழுப்பாமல் மரியாதையையும், அனுதாபத்தையும் காட்டுவோம்” இவ்வாறு அஜித் பவார் தெரிவித்தார்.
மும்பை – பாந்த்ரா கிழக்கு பகுதியில் நேற்று (அக்.12) அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 66 வயதான பாபா சித்திக் கடந்த 1976 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார். மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர். அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நேற்று நிர்மல் நகரில் உள்ள அவரது மகனின் அலுவலகத்துக்கு வெளியில் இருந்த போது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இரண்டு முதல் மூன்று ரவுண்டுகள் வரை சுடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை மூன்று பேர் நிகழ்த்தியுள்ளனர். அதில் இருவரை போலீஸார் பிடித்துள்ளனர். ஒருவர் மாயமாகி உள்ளார். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.