புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும் கும்பமேளா சுமார் 3 மாதங்கள் நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள துறவிகளின் பல்வேறு அமைப்புகளான 13 அகாடாக்கள் இந்த கும்பமேளாவை நடத்த உள்ளன. இதில் முக்கியமான ஜுனா அகாடாவில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும் துறவிகளாக உள்ளனர்.
இவர்களில் சுமார் 3 வருடங்களுக்கு முன் துறவியானவர்களில் 71 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்து சமுதாயத்தில் சனாதனத்தை வளர்க்க அரும்பாடுபட்டு வருவதாகப் பாராட்டப்படுகின்றனர். இவர்களின் பணியை அங்கீகரித்து ஊக்குவிக்க, அவர்களுக்கு மகாமண்டலேஷ்வர் பதவிஅளிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இப்பதவியை வரும் கும்பமேளாவில் ஜுனா அகாடா அளிக்க உள்ளது.
இதுகுறித்து ஜுனா அகாடா துறவிகள் கூறும்போது, “ஜுனா அகாடாவில் எவ்வித சமுதாயப் பாகுபாடும் இன்றி அனைவரும் சமம் என்ற நிலை இருப்பதை இது காட்டுகிறது. இந்த நடவடிக்கை மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மதம் மாறுவதையும் தடுக்க முடியும்’’ என்று தெரிவித்தனர்.
71 துறவிகளுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் முதல் ஜெகத்குருவான சுவாமிமகேந்திரானந்த் கிரி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.மகா மண்டலேஷ்வரான இவர்கடந்த ஏப்ரலில் முடிந்த கும்பமேளாவில் ஜெகத்குருவாக அமர்த்தப்பட்டார். இவருடன் சேர்த்து அதே சமுதாயத்தின் துறவிகளான கைலாஷ்நாத் கிரி மகாமண்டலேஷ்வராகவும், ராம் கிரி மகந்த் பதவியிலும் அமர்த்தப்பட்டனர். ஒரேசமுதாயத்தை சேர்ந்த இந்தமூவருமே குஜராத்தை சேர்ந்த வர்கள். பதவியேற்புக்கு பிறகு 71 மகாமண்டலேஷ்வர்களுக்கும் அதற்கான பயிற்சிகளை ஜெகத் குரு மகேந்திரானந்த் கிரி அளிக்க உள்ளார்.