ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், 2020-ம் ஆண்டு அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் காளி பாய் பீல் ஸ்கூட்டி திட்டத்தைக் கொண்டுவந்தது.
இதன்படி, பள்ளி பொதுத் தேர்வில் 65 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று கல்லூரிக்குச் செல்லும், மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடந்தஆண்டு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 1,500 ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.12கோடி ஆகும். இந்த ஸ்கூட்டர்களை மாணவிகளுக்கு விநியோகிக்க அம்மாநிலத்தில் உள்ள வித்யாமந்திர் கல்லூரி மற்றும் ஹர்தேவ் ஜோசி அரசு பெண்கள் கல்லூரியில் நிறுத்தப்பட்டன.
ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம்காரணமாக, கடந்த ஒராண்டாக அந்த ஸ்கூட்டர்கள் விநியோகிக்கப்படாமல் உள்ளன. அவை பழுதடைந்து பயன்படுத்த முடி யாதவையாக மாறியுள்ளன. இத னால், மாணவிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்காரணமாகவே ஸ்கூட்டர்களை மாணவிகளுக்கு விநியோகிப்பதில் சிக்கல் எழுந்தது” என்று தெரிவித்தனர். இந்நிலையில், ஸ்கூட்டர் விரைவில் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் பழங்குடி நலத் துறை அமைச்சர் பாபு லால் உறுதியளித்துள்ளார்.