வியன்டியேன்: லாவோஸ் நாட்டில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கு சந்தித்த அயல்நாட்டுத் தலைவர்களுக்கு இந்திய பாரம்பரிய பெருமையைப் பறைசாற்றும் பொருட்களைப் பரிசளித்தார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, புருனே ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதுபோல், கிழக்குஆசியா அமைப்பில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான்உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி லாவோஸ், தாய்லாந்து, நியூசிலாந்து, ஜப்பான்ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கைவினை பொருட்களை பரிசளித்தார்.
அந்த வகையில், பிரதமர் மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு மகாராஷ்டிர மாநிலத்தின் பாரம்பரியமிக்க மாணிக்கக் கற்கள் பதித்த ஒரு ஜோடி வெள்ளி விளக்கை அன்பளிப்பாக அளித்தார். அடுத்து, லாவோஸ் அதிபர் சிசோலித்துக்கு தமிழ கத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட பித்தளையால் ஆன புத்தர்சிலையை வழங்கினார். லாவோஸ்பிரதமர் சோனெக்சே சிபாண்டோனுக்கு மரத்தில் செதுக்கிய புத்தர் முகம் மற்றும் அவரது மனைவிக்கு ராதா-கிருஷ்ணன் புடைச்சிற்பம் ஆகியவற்றை அளித்தார். தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு லடாக் பகுதியின் பண்பாட்டினை எடுத்துரைக்கும் மேசை ஒன்றை பரிசளித்தார். ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுக்கு மேற்கு வங்கத்தின் கலைநயமிக்க வெள்ளி மயில் சிற்பத்தை பரிசாக வழங்கினார்.