வணிகவரி – பதிவு துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.9,085 கோடி கூடுதல் வருவாய் ஈட்டி சாதனை

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடந்த நிதியாண்டு செப்டம்பர் மாதம் வரை ஈட்டிய வருவாயை ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் கூடுதலாக 9,085 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னையில் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் 2024-ம்ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மறைந்த வணிகரின் குடும்பத்தினரான பட்டுக்கோட்டையை சேர்ந்த க.சந்தானலெட்சுமிக்கு குடும்ப நல நிதி உதவித் தொகையாக தமிழ்நாடு வணிகர் நலவாரியம் சார்பில் காசோலை ரூ.3 லட்சமும் கும்பகோணத்தைச் சேர்ந்த வி.ராஜசேகருக்கு மருத்துவஉதவித் தொகையாக ரூ.50 ஆயிரமும் அமைச்சர் வழங்கினார்.

வணிகவரித் துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் (செப்டம்பர் மாதம் வரை) ரூ.59,758 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்நிலையில் நிகழும் 2024-25 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான வருவாய் ரூ.67,548 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி கடந்த நிதிஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை கூடுதலாக ரூ.7,800 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இதேபோல் பதிவுத்துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் (செப்டம்பர் வரை) வருவாய் ரூ.9,378 கோடியாகும். 2024-25நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.10,663 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்படி கடந்த நிதிஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.1,285 கோடி வருவாய் வந்துள்ளது.

இதன்படி வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் வருவாய் 2024-25-ல் ரூ.7,8211 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.9,085 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் அறிவுறுத்தல்: பின்னர் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, “நவீனதொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி தமிழக வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து கூடுதல் ஆணையர்களும், இணை ஆணையர்களும் ஒன்றினைந்து ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித் துறை ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) துர்கா மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனை வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.