தமிழ்நாட்டில் தடைச் செய்யப்பட்ட `லாட்டரி சீட்டு’ விற்பனை மற்றும் நம்பர் விளையாட்டான `காட்டன் சூதாட்டம்’ அமோகமாக நடைபெறுகிறது. தினக் கூலிக்குச் செல்லும் ஏழைத் தொழிலாளர்களை குறிவைத்தே இந்த விதமான சூதுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலத்தில் லாட்டரி சீட்டு ஏஜென்ட்டுகளுக்கு `கடிவாளம்’ போடும் விதமாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார் ஐ.ஜி அஸ்ரா கர்க். கடந்த ஒரு மாதத்துக்குள்ளாக 39 லாட்டரி ஏஜென்ட்டுகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட சட்டவிரோத கும்பல்களிடம் இருந்து 87 பவுன் நகைகளும், சுமார் ரூ.49.49 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது குறித்து, நேற்றைய தினம் வடக்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “சிறப்புக் கவனம் செலுத்தி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு காவல் நிலையங்களில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 39 நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 14-9-2024 அன்று அருண் என்கிற அருணாச்சலம், இப்ராஹிம், நாகராஜன், ரமேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து தடைச் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், 2 லேப்டாப்கள், 7 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. கூடுதலாக 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.48,49,200 ரொக்கப் பணமும் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. இதில், கைது செய்யப்பட்ட அருண் என்கிற அருணாச்சலம் என்பவர் வேலூர் மாவட்டத்திலும், இப்ராஹிம் செங்கல்பட்டு மாவட்டத்திலும் லாட்டரி விற்பனைக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதேபோல, கடந்த 01-10-2024 அன்று திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுபாஷ், தமிழ்குமரன், அஸ்கர், கணேசன், குமரேசன், சுப்பிரமணி ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு ஸ்கார்பியோ கார் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களின் கூட்டாளிகளான வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, யுவராஜ் ஆகிய மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டு, கூடுதலாக மேலும் ஒரு கார், 2 லேப்டாப்கள், 3 பிரிண்டர்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவைக் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து நடவடிக்கை தொடர்ந்ததில், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த சட்டவிரோத கும்பல்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வரும் காலங்களில், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இத்தகைய சட்டவிரோதமான செயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும் வேலூர் சரக டி.ஐ.ஜி மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் எஸ்.பி-க்களும் குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்’’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.