பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் வேண்டப்பட்டவரான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று இரவு மும்பையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து கேள்விப்பட்டதும் சல்மான் கான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சல்மான் கான் மும்பைக்கு வெளியில் பிக்பாஸ் ஷூட்டிங்கில் இருந்தார். பாபா சித்திக் துப்பாக்கியால் சுடப்பட்டதாக வந்த செய்தியை கேள்விப்பட்டு உடனே ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அவசரமாக மும்பைக்கு திரும்பிய சல்மான் கான் லீலாவதி மருத்துவமனைக்கு சென்று பாபா சித்திக் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.
பாபா சித்திக் மரணம் சல்மான் கானுக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு ஆகும். பாபா சித்திக் நடிகர் சல்மான் கான் மட்டுமல்லாது ஷாருக்கானுக்கும் நெருக்கமானவராகவே இருந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் கான் நடிகை கேத்ரீனா கைஃப்பை காதலித்து வந்தார்.
2008ம் ஆண்டு கேத்ரீனா கைஃப் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் உள்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் ஷாருக்கான், சல்மான் கான் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டனர். இச்சம்பவத்திற்கு பிறகு இருவரும் 5 ஆண்டுகளாக பேசிக்கொள்ளவில்லை. எந்த பொது நிகழ்ச்சியிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை தவிர்த்து வந்தனர். இதையடுத்து 2013-ம் ஆண்டு பாபா சித்திக் இப்தார் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த பார்ட்டிக்கு ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் என இரண்டு பேரும் வந்திருந்தனர். அவர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் சந்திக்க வைத்து அவர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாட்டை தீர்த்து வைத்தவர் பாபா சித்திக். அந்த இப்தார் பார்ட்டியில் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அப்புகைப்படம் மீடியாவில் வெளியானது. அந்த சம்பவத்திற்கு பிறகு இதுவரை இருவரும் சண்டையிட்டுக்கொண்டது கிடையாது.