மைசூரு தசரா திருவிழா (Mysuru Dasara)
உலக அளவில் பயணிகளை ஈர்க்கும் இந்திய திருவிழாக்களில் ஒன்றாக இருக்கிறது மைசூரு தசரா திருவிழா. கன்னட மொழி பேசும் மக்களின் குலதெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு செய்யும் மிகப்பெரிய திருவிழாவாக தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. மைசூரை தலைநகராக கொண்டு இயங்கிய மன்னராட்சி காலத்தில் அரசின் காவல் தெய்வமாக சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு வந்துள்ளனர். இன்றளவும் அரசு விழாவாகவே தசரா திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான 414 – வது தசரா திருவிழா, கடந்த 3 – ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது.
ஜம்போ சவாரி (Jamboo Savari)
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஜம்போ சவாரி எனப்படும் 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் யானை மீது அருள்பாலிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
கர்நாடக மாநில முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மலர்களைத்தூவி ஜம்போ சவாரியை தொடங்கி வைத்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக நின்று அம்மனை வணங்கினர். அலங்கரிப்பட்ட நகர வீதிகளில் 5 கிலோமீட்டர் வரை யானை பவனி (Jamboo Savari) நடைபெற்றது. 7 பீரங்கிகளில் குண்டுகள் முழங்க சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வீர மரியாதையும் செலுத்தப்பட்டது. ஜம்போ சவாரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மைசூரு அரண்மனை மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.