இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் இருக்கிறது. அதில், பல்வேறு உலக கலாச்சாரங்களின் மானுடவியல் மற்றும் தொல்பொருள் சேகரிப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்நிலையில், கலிபோர்னியாவைச் சேர்ந்த நாகா மானுடவியல் பேராசிரியர் டோலி கிகோன், கடந்த திங்கள்கிழமை ‘எக்ஸ்’ பக்கத்தில், “21-ம் நூற்றாண்டிலும் நாகா சமூக மக்களின் மூதாதையர்களின் மனித எச்சங்கள் சேகரிப்புப் பொருளாகத் தொடர்கிறது” எனக் குறிப்பிட்டு, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொம்புகள் கொண்ட மனித மண்டை ஓட்டை, ‘நாகா மனித மண்டை ஓடு’ என்ற பெயரில் பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் ஏலம் விட அறிவிக்கப்பட்டது தொடர்பான செய்தியைப் பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த அறிவிப்பைப் பலரும் விமர்சித்து வந்தனர். குறிப்பாக நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “இந்த ஏலம் மனிதாபிமானமற்ற செயல். நமது மக்கள் மீதான தொடர்ச்சியான காலனித்துவ வன்முறை. இதைத் தடுத்து நிறுத்த உதவ வேண்டும்” எனக் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கிடையில், பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தின் எக்ஸ் பக்கத்தில், “நாகா சமூக மூதாதையரின் எச்சங்கள் விற்பனை இப்போது திரும்பப் பெறப்படுகிறது” எனக் குறிப்பிட்டு, ஏலத்தை நிறுத்தியிருக்கிறது.