கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக நீண்ட மாதங்களாக இருந்த வெயிலின் தாக்கம் சற்றே குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை முதல் கோவையில் சற்று பலத்த மழை பெய்ய தொடங்கியது.
மழையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பயங்கர இடி, மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்துக்கு மாநகர் முழுவதும் பலத்த மழை பெய்தது.
காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை, சிங்காநல்லூர், வடவள்ளி, கவுண்டம்பாளையம், பீளமேடு, கணபதி, மசக்காளிபாளையம், இராமநாதபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் முக்கிய சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போலத் தேங்கியது.
அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, கிராஸ்கட் சாலை, பூ மார்கெட் , அவினாசிலிங்கம் கல்லூரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. கணபதி சிவசக்தி காலனி பகுதியில் பெய்த கன மழை காரணமாக, மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. புல்லுக்காடு மற்றும் வெரைட்டி ஹால் பகுதிகளில் உள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பிலும் தண்ணீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். சாய்பாபாகோவில் ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்திருந்தது.
அங்கு வந்த ஒரு தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
முக்கியமாக அவிநாசி சாலை, திருச்சி சாலையில் மழை நீர் ஆறுபோல ஓடியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். நகரமே ஸ்தம்பித்தது. மோட்டார் இயந்திரம் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.