புதுடெல்லி: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சக அதிகாரி கூறியதாவது: நாடு முழுவதும் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன்கீழ், நாடுமுழுவதும் தடுப்பணைகளை கட்டுதல், நீர்த்தேக்கங்களை உருவாக்குதல், கிணறுகளை ஆழப்படுத்தி சீரமைத்தல் உட்பட 10 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜல் சஞ்சய், ஜன் பகிதாரி (ஜேஎஸ்ஜேபி) என்ற இந்த புதிய முன்முயற்சி, கடந்த 2019-ம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 256 மாவட்டங்களின் 1,592 தொகுதிகளில் தொடங்கப்பட்ட ‘‘எங்கே விழுந்தாலும், எப்போது விழுந்தாலும் மழை நீரை சேகரி’’ என்ற திட்டத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மழைநீர் சேகரிப்பு, நீர்நிலை மறு உருவாக்கம், போர்வெல் ரீசார்ஜ் மூலம் அரசு மற்றும் அரசு சாரா ஆதாரங்களான சிஎஸ்ஆர் நிதி, தொழில் நிறுவனங்கள், குடிமை அமைப்புகள் மற்றும் நீர்வள ஆர்வலர்கள் ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். எதிர்காலத்துக்கான நீர்பாது காப்பை உறுதி செய்வதில் இவர்கள் இணைந்து செயல்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.