திருவனந்தபுரம்: ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே இனி சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற கேரள அரசின் முடிவுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நடப்பு ஆண்டுக்கான சபரிமலை சீஸன் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்க உள்ளது. சபரிமலையில் மண்டலம்-மகரவிளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள் இனி ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்பாட்புக்கிங் எனப்படும் நேரடியாக வந்து பதிவு செய்யும் முறை இனி கிடையாது என கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் விஎன் வாசவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த முறையால் எந்தவொரு பக்தரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார். ஒரு நாளைக்கு 80,000 பேர் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மெய்நிகர் வரிசை அமைப்பு சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர் ஒருவர் மெய்நிகர் வரிசை அமைப்பில் (விர்சுவல் கியூ சிஸ்டம்) பதிவு செய்து கொண்டு அவருக்கான தரிசனம் மற்றும் பிரசாதத்துக்கான டிக்கெட்டை சபரிமலை கோயிலின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலேயே ஆன்லைன் மூலமாக பெற முடியும். மேலும், பயணம் செய்ய விரும்பும் வழியையும் பக்தர்கள் இதன் மூலம் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் பாதுகாப்பு: தேவஸ்வம் போர்டு அமைத்துள்ள மையங்களை கண்டறிந்து அங்கு நேரில் சென்று சபரிமலை தரிசனத்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்வது இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையாக இருந்தது. இந்த நிலையில், பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்வது அவசியம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. எதிர்ப்பு ஆனால், கேரள அரசின் இந்த முடிவுக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கூறுகையில், “ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலை கோயிலுக்கு செல்வோம். யாராவது தடுத்தால் போராட்டம் நடத்துவோம். தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா என பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் அனைவரும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியுமா? அதற்கான விழிப்புணர்வு, வசதி அவர்களிடம் இருக்குமா’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூறுகையில், “ஆன்லைன் மற்றும் நேரடியாக சென்று முன்பதிவு செய்யும் முறை ஆகிய இரண்டுமே அமலில் இருக்க வேண்டும். தினமும் 80,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இது, 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை காண வரும் பக்தர்களிடம் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். அவர்களுக்கான தரிசன வாய்ப்பை மறுக்க கூடாது” என்று தெரிவித்துள்ளது. இதே கருத்தை எல்டிஎப்-ன் இரண்டாவது மிகப்பெரிய கூட்டணி கட்சியான சிபிஐ-யும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.