கராச்சி: டிப்தீரியா எனும் கொடிய நோய் ‘காரிணி பாக்டீரியம் டிப்தீரியே’ என்ற வகை பாக்டீரியாக்களால் பரவுகிறது.
இந்தக் கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும் உணவு விழுங்குவதையும் தடுப்பதால் இது தொண்டை அடைப்பான் என அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று எளிதில் ஏற்படும். பெரும்பாலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் வயதானவர்களையும் இது பாதிக்கும். டிப்தீரியாவை குணப்படுத்த ‘டிப்தீரியா ஆன்ட்டி-டாக்சின்’ எனும் உயிர்காக்கும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த மருந்து பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது.
இதனை சிந்து மாகாண சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர்கள் மேலும் கூறும்போது, “சிந்து தொற்று நோய் மருத்துவமனையில் கடந்த ஆண்டு 140 டிப்தீரியா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 52 பேர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தனர்’’ என்று தெரிவித்தனர்.
பாகிஸ்தானிய சுகாதார நிபுணர்கள் கூறுகையில், “கராச்சி உட்பட சிந்து மாகாணம் முழுவதும் உயிர் காக்கும் ஆன்ட்டி டாக்ஸின் மருந்து பற்றாக்குறை உள்ளது. ஒரு குழந்தையை குணப்படுத்த பாகிஸ்தானிய ரூபாயில் 2 லட்சத்து 50 ஆயிரம் தேவைப்படுகிறது. டிப்தீரியா பரவலை தடுக்க சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி பாதுகாப்பு இல்லாததால் அவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. எனவே இந்தப் பிரச்சினையில் அரசு தீவிர கவனம் செலுத்துவது அவசியம்’’ என்றனர். ‘‘தொண்டை புண், காய்ச்சல் மற்றும் கழுத்து சுரப்பிகளின் வீக்கம் போன்றவை டிப்தீரியாவின் அறிகுறிகள் ஆகும். சரியான சிகிச்சை இல்லாவிடால் இந்த நோய் 30 சதவீதம் பேருக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும். குறிப் பாக குழந்தைளுக்கு இதனால் அதிக ஆபத்து உள்ளது’’ என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.