இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை பாகிஸ்தான் செல்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு இஸ்லாமாபாத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் செல்லும் ஜெய்சங்கர், முதல் நிகழ்ச்சியாக எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வழங்கும் விருந்தில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயணத்தின்போது 24 மணி நேரத்துக்கும் குறைவாகவே ஜெய்சங்கர் பாகிஸ்தானில் இருப்பார் என கூறப்படுகிறது. எஸ்சிஓ மாநாட்டின் இடையே, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்கும் திட்டம் எதையும் ஜெய்சங்கர் கொண்டிருக்கவில்லை.
இந்த பயணம் குறித்து கடந்த 5ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் செல்கிறேன். எனது பயணம் இந்தியா – பாகிஸ்தான் உறவுகளைப் பற்றியது அல்ல. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொறுப்பான உறுப்பினராக இருப்பது மட்டுமே. நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் காரணமாக நிறைய ஆர்வம் இருக்கலாம். நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன். இது பலதரப்பு நிகழ்வு. நான் எஸ்சிஓவில் நல்ல உறுப்பினராக இருப்பேன், அதற்கேற்ப கண்ணியமான நபராக நடந்து கொள்வேன்.
இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் எஸ்சிஓவில் உறுப்பினராக உள்ளது. அதனால்தான், இந்த முறை உச்சிமாநாடு பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. ஆனால் அது எனது பயணத்தின் தன்மையை மாற்றாது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதற்கு மட்டுமல்லாது, எதிர்பாராதவிதமாக என்ன நடக்கும் என்பதற்கும் திட்டமிடுவது முக்கியம். அந்த வகையில், இந்த பயணத்துக்கான எனது திட்டமிடல் இருக்கும்” என தெரிவித்திருந்தார்.
2016-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். 2016, ஆகஸ்ட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமாபாத் சென்றார். அதன் பிறகு, எந்த இந்திய அமைச்சரும் பாகிஸ்தானில் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. கடைசியாக 2015 டிசம்பரில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்குச் சென்றார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2019 பிப்ரவரியில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கியதை அடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை திரும்பப் பெறுவதாகவும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் இந்தியா அறிவித்த பிறகு உறவுகள் மேலும் மோசமடைந்தன. 370வது சட்டப்பிரிவை புதுடெல்லி ரத்து செய்த பிறகு இந்தியாவுடனான தூதரக உறவை பாகிஸ்தான் குறைத்துக்கொண்டது.