கோவை: கோவையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்தது. சாலையோர தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகளின் கீழ் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
வங்கக் கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேல் அடுக்கு சுழற்சி உள்ளிட்ட காரணங்களால் கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. மழை நேற்றை தொடர்ந்து இன்று (அக்.14) மதியம் மற்றும் மாலை நேரங்களில் லேசாக மழை பெய்யத் தொடங்கி நின்று விட்டது. அதன் பின்னர், 5 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் சாரல் மழையாக தூறினாலும், அடுத்த சில நிமிடங்களில் கனமழையாக மாறியது.
சிறிது நேரமே பெய்தாலும் மழையின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு, லட்சுமி மில், அண்ணா சிலை சந்திப்பு அருகே, சாயிபாபாகாலனி, நவஇந்தியா, கணபதி, காந்திமாநகர், விளாங்குறிச்சி சாலை, குனியமுத்தூர், போத்தனூர், கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம், சிவானந்தாகாலனி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களிலும், புறநகரப் பகுதிகளிலும் சாலையோர தாழ்வான இடங்களிலும், சுரங்கப்பாதைகளின் கீழ் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. முழுமையாக தூர்வாராத மழைநீர் வடிகால்கள், தூர்வாரப்படாத சாக்கடைகள் போன்றவற்றால் மாநகரின் பல்வேறு உட்புறப் பகுதிகளில் ஆங்காங்கே குளம் போல் மழைநீர் தேங்கிக் காணப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து புகுந்தது. ஆவாரம்பாளையம் பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகத்தினர் அவர்களை மீட்டு அருகில் ஏற்பாடு செய்திருந்த நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல், மேட்டுப்பாளையம், அன்னூர், பேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 ஓட்டு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. சில இடங்களில் குடிசை வீடுகளும் சரிந்தன.
காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலைய வளாகங்களில் இன்று குளம் போல் மழைநீர் தேங்கியது. பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் குளம் போல் தேங்கிக்காணப்பட்ட நீரில் நனைந்தபடி பேருந்தில் ஏறிச் சென்றனர். சிவானந்தாகாலனி ரயில்வே சுரங்கப்பாதையின் கீழ் நேற்று (அக்.13) பெய்த கனமழையின் போது, தனியார் பேருந்து சிக்கியது. தண்ணீரில் சிக்கியவுடன் பேருந்து ஆஃப் ஆகி விட்டது. ஓட்டுநர் முயற்சித்தும் ஸ்டார்ட் ஆகவில்லை. நேரம் ஆக ஆக தண்ணீர் அளவு அதிகரித்தால், தகவல் அறிந்த கோவை தெற்கு, கோவை வடக்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுபேருந்தில் இருந்த 35 பயணிகளை மீட்டனர். மேலும், ‘டோப்’ போட்டு வாகனத்தை இழுக்க பயன்படும் இழுவை கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தண்ணீரில் சிக்கிய பேருந்து வெளியே கொண்டு வரப்பட்டது.
மற்றொரு பேருந்து சிக்கியது: இதே இடத்தில் இன்றும் மழைநீர் தேங்கியிருந்தது. இதை கடந்து சென்று விடலாம் என அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து சிவானந்தாகாலனி ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டது. கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை கயிறு கட்டி மீட்டனர். மழையால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்ற பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
மழை நிலவரம்: கோவையில் நேற்று (அக்.13) காலை முதல் இன்று (அக்.14) காலை வரை, பீளமேட்டில் 58.50 மி.மீ, வேளாண் பல்கலை.யில் 60 மி.மீ, அன்னூரில் 12.40 மி.மீ, கோவை தெற்கு தாலுகாவில் 78 மி.மீ, சூலூரில் 38 மி.மீ, வாரப்பட்டியில் 27 மி.மீ, தொண்டாமுத்தூரில் 18 மி.மீ, பொள்ளாச்சியில் 52 மி.மீ, மாக்கினாம்பட்டியில் 64 மி.மீ, கிணத்துக்கடவில் 23 மி.மீ, வால்பாறை பி.ஏ.பி-யில் 53 மி.மீ, வால்பாறை தாலுக்காவில் 51 மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது.