திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே அமைந்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வந்தவர் பாப்பாள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி இப்பள்ளியில் படிக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய பெற்றோர், பாப்பாளை சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பள்ளி வளாகத்தைப் பூட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சாதிய ரீதியிலான இந்த வன்கொடுமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாப்பாளை சமையல் செய்யவிடாமல் தடுத்த கந்தசாமி, மூர்த்தி, பழனிச்சாமி, மூர்த்தி உள்ளிட்ட 36 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருப்பூர் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த வழக்கின் நிலை குறித்துப் பாதிக்கப்பட்ட பாப்பாளிடம் பேசினோம். “இந்தச் சம்பவம் நடந்த நாள் முதல் அரசுத் தரப்பிலிருந்து எனக்கு எந்தவிதப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. வழக்கறிஞர்களின் தொடர் முயற்சியால்தான் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான உதவித் தொகை ஓரளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் முழுமையாக வழங்கவில்லை. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்து செல்வதற்கான பயணப்படி வழங்க வேண்டும் என வன்கொடுமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பலமுறை மனு கொடுத்தும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, முதல் குற்றவாளியான பழனிச்சாமி என்னை நோக்கி, ‘ஏன் என் பேரைச் சொல்லிக்கிட்டு இருக்குற…?’ என்று மிரட்டினார். இதை அப்போதே நீதிமன்றத்தில் முறையிட்டேன். ஆனால், பழனிச்சாமி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தொடக்கத்தில் அரசுத் தரப்பில் காட்டிய ஆர்வம் தற்போது இல்லை. வழக்குரைஞர்கள் ப.பா.மோகன், பாண்டியன் போன்றவர்களின் தலையீட்டால்தான் ஏதோ இந்த வழக்கு இப்போது வரை உயிர்ப்புடன் இருக்கிறது” என்றார்.
தொடக்கத்திலிருந்து இந்த வழக்கைக் கவனித்துவரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ச. நந்தகோபாலிடம் பேசினோம்.
“சமையலர் பாப்பாள் வழக்கை வன்கொடுமையின் உச்சமாகத்தான் பார்க்க வேண்டும். தீண்டாமை வழக்குகளுக்கான நடைமுறை எதுவும் இதில் பின்பற்றப்படுவதில்லை. வன்கொடுமைச் சட்டப்படி, பாதிக்கப்பட்டவர்களின் முன்னிலையில்தான் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்டவர் விசாரணைக்கு வந்து செல்ல பயணப்படி, பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை பாப்பாளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
அரசு சார்பில் சமையலர் பாப்பாளுக்குச் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் கேட்கும் ஆவணங்களை போலீஸ் மற்றும் அரசுத் தரப்பிலிருந்து உடனடியாகக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசிடம் இருந்து போராடிப் பெற வேண்டியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் தொடக்கத்தில் பாப்பாள் பணியாற்றிய பள்ளியில் அவரையே சமைத்து அனைத்து சமூகத்தினரையும் அழைத்து ஜமாபந்தி நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால், பாப்பாள் சமைப்பதற்குப் பதிலாக வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை வைத்துச் சமைத்துப் பரிமாற மட்டும் பாப்பாளை அனுமதித்தனர். அந்த அளவுக்கு அரசு அதிகாரிகளும், மாற்றுச் சமூகத்தினரும் இணைந்து செயல்பட்டனர். நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாப்பாளை அச்சுறுத்தும் வகையில் அவதூறாகப் பேசுகிறார்கள். வழக்கின் விசாரணை போக்கும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. வழக்கை வேண்டுமென்றே காலதாமதப்படுத்துவதாகவே நாங்கள் கருதுகிறோம். பாதிக்கப்பட்ட பாப்பாளுக்கு உரிய நீதி கிடைப்பதை நீதிமன்றமும், அரசும் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
வழக்கைக் கவனித்து வரும் போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். “பாப்பாள் தரப்புக்கு அரசு மற்றும் போலீஸ் தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு தந்து கொண்டுதான் இருக்கிறோம். தற்போது, இந்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இதற்கு மேல் எங்களால் எதுவும் கூறமுடியாது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY