தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனரும் மறைந்த முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வத்தின் மறைவு கலைஞர் குடும்பத்திற்கு பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
உறவுகளுக்குள் ஏதாவது உரசல்கள் ஏற்பட்டால் அதைச் சரி செய்து தீர்த்து வைப்பது இவர்தான். மாறன் சகோதரர்களுக்கும் கலைஞர் குடும்பத்திற்கும் இடையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை வெடித்தது நினைவிருக்கலாம். பிறகு ‘கண்கள் பனித்தது’ என கலைஞர் தன் பேரன்களை அரவணைத்துக் கொண்டதில் செல்வத்துக்கு பெரும் பங்குண்டு என்கிறார்கள். அழகிரி, ஸ்டாலின் இருவரும் மைத்துனர்கள் மற்றும் பிரியத்துக்குரிய தாய்மாமன் மகன்கள்.
அந்தப்பக்கம் மாறன் சகோதரர்கள் சொந்த அண்ணன் பிள்ளைகள் என்பதால் இரண்டு பக்கமும் பக்குவமாக எடுத்துச் சொல்லி, ஏதாவதொரு தரப்புக்கே தன் ஆதரவு என்ற பேச்சு வந்து விடாதபடி அந்தப் பிரச்னையைக் கையாண்டவர் செல்வம். `செல்வம் பொதுவானவர்’ என அப்போதே பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
குடும்பத்தில் பெரிய ஒருவர் என்பதைக் காட்டிலும் மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க. தமிழரசு ஆகியோரை மட்டுமல்லாது தற்போதைய துணை முதல்வர் உதயநிதி வரை எல்லாரும் இவரால் தூக்கி வளர்க்கப்பட்டவர்கள் என்பதால் இவர்கள் எல்லோரும் செல்வத்தின் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் வைத்திருந்தனர்.
தன் அப்பாவை இழந்த போது எப்படி கண்ணீர் விட்டாரோ அதேபோலத்தான் செல்வத்தின் உடலின் அருகில் கண்கள் கலங்க அப்படியொரு சோகத்துடன் நின்றிருந்தார் மு.க.ஸ்டாலின்.
உதயநிதியும் தன்னுடைய அறிக்கையில், ‘கலைஞரைப் போலவே நேர் வகிடு எடுத்து சீவிய தலை, தாத்தாவைப் போலவே கையில் முரசொலியுடன் அவர் வீட்டுக்கு வந்தால் தாத்தாவைப் பார்ப்பது போலவே இருக்கும்’ என தன் துயரத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வர இயலாத சூழலில் அமெரிக்காவில் இருந்து வீடியோ கால் மூலம் அவரது உடலைப் பார்த்துக் கண் கலங்கினார் அழகிரி.
செல்வம் மறைவுக்கு அழகிரியால் ஏன் நேரில் வர இயலவில்லை என்பது குறித்து விசாரித்த போது, சமீபத்தில் வேலூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அழகிரியின் மகன் துரை தயாநிதி தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரின் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே அழகிரியும் மகன் அருகிலேயே தங்கியிருந்து கவனித்துக் கொள்கிறார்’ என்கிறார்கள்.
அப்பல்லோ மற்று வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைகளில் எடுத்த சிகிச்சைகளில் நல்ல முன்னேற்றம் உண்டான போதும் சில தொடர் தெரபிகளை எடுக்க வேண்டியே சிகாகோ மருத்துவமனையில் சேர்ந்திருக்கின்றனர் என்கிறார்கள். இந்தக் காரணத்தால்தான் தன் மைத்துனரின் மறைவுக்கு வரமுடியாமல் வீடியோ கால் மூலம் தன் துயரத்தைப் பதிவு செய்திருக்கிறார் அழகிரி.