புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1, 2025 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 1, 2025 வரையில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை (ஆன்லைன் தள விற்பனை உட்பட) மற்றும் அவற்றை வெடிக்க முழு தடை விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் பனி காலத்தில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி வாழ் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (அக்.14) டெல்லி காற்றின் தரக் குறியீடு 370 என உள்ளது. தசரா கொண்டாட்டத்துக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை அன்று காற்றின் தரக் குறியீடு 224 என டெல்லியில் இருந்தது. இதை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.