இரு தினங்களுக்கு கனமழை, அதி கனமழை எச்சரிக்கை: ‘தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமையைப் பொறுத்தவரையில், டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வரும் புதன்கிழமையை பொறுத்தவரையில், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும், என்றும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக கனமழையும், அதனை ஒட்டியுள்ள திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை: அக்.15 முதல் அக்.17 வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தமிழக முதல்வர், கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அக்.15 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்: ‘அக்.15 முதல் அக்.18 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்’ என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
‘தமிழகத்தில் 20 டன் பால் பவுடர் இருப்பு’ – ஆவின் விளக்கம்: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக, கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது, என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை தேவை: தலைவர்கள் கருத்து: வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டும். முடிவு பெறாமல், மூடப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை தேவை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். குறைந்த பணியாளர்களைக் கொண்டு இந்த வடகிழக்கு பருவ மழையை சரி செய்து சமாளித்து விடலாம் என அரசு எண்ணாமல், பொதுமக்கள் மின்தடையால் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமையாகும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மழை எதிரொலி – கலந்தாய்வுகள் தள்ளிவைப்பு: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு வரும் 17-ம் தேதி தொடங்க இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு 21-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த பிஎட் கலந்தாய்வு கனமழை எச்சரிக்கை காரணமாக, அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள்: கடந்த 2015 பெருவெள்ளம் மற்றும் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் கற்றுக்கொண்ட வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி உள்ளனர். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக, மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீஸார் ரூ.1000 அபராதம் விதிப்பதாக கார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிப்பு: கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்: ‘தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஸ்டாலினின் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது. தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஸ்டானின் திமுக அரசு ஈடுபட வேண்டும்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், “தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது” என்று அவர் காட்டமாக கூறியுள்ளார்.
இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? – ராமதாஸ்: “வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மழை வெள்ளத்தில் கோவை, மதுரை மிதக்கின்றன. அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “சென்னை மாநகரில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. 45-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு வரை முடிக்கப்படவில்லை. மழை – வெள்ளத்தை எதிர்கொள்ள படகுகள், நீர் இறைக்கும் கருவிகள் ஆகியவை மிகவும் அவசியம் தான் என்றாலும் கூட, அவற்றை மட்டுமே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நம்பிக் கொண்டிருக்கின்றனவோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
கடலூர் மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம், கடலுக்குச் சென்றுள்ள படகுகள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும். மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.