India vs New Zealand Test Series: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளன. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் அக். 16ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் வரும் அக்.24ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி நவ.1ஆம் தேதியும் தொடங்க உள்ளன. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு மிக முக்கியமான தொடராக உள்ளது.
இந்திய அணியை பார்க்கும் முன்னர் நியூசிலாந்து அணிக்கு இது எவ்வளவு முக்கியமான தொடர் என பார்த்துவிடலாம். 2021 WTC சாம்பியனான நியூசிலாந்து அணி தற்போது WTC புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. எனவே நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு வாய்ப்பில்லை. கடந்த மாதம் இலங்கை அணிக்கு எதிராக 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்ததால், மீண்டெழுவதற்காக நியூசிலாந்து அணி கடுமையாக முயற்சிக்கும்.
மறுபுறம் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி நம்பிக்கையுடன் இருக்கிறது. உள்நாட்டு டெஸ்ட் தொடரை 2013ஆம் ஆண்டில் இருந்தே இந்திய அணி ஒருமுறை கூட இழக்கவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டில் நியூசிலாந்து இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரை விளையாடியபோது 1-0 என்ற கணக்கில் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்த வெற்றிப் பயணத்தை தொடர்வது மட்டுமின்றி WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவும் நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியாக வேண்டும்.
தொடரை வைட்வாஷ் செய்யும் இந்திய அணி?
WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெற அடுத்துள்ள 8 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றே ஆக வேண்டும். நியூசிலாந்து தொடருக்கு பின்னால் ஆஸ்திரேலியா தொடரும் இருக்கிறது என்றாலும் உள்நாட்டிலேயே மூன்று போட்டிகளையும் வென்றுவிட்டால், பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் எவ்வித அழுத்தமும் இன்றி இந்தியா அதிரடியாக விளையாடலாம். அந்த வகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பெங்களூருவில் நடைபெறும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, வங்கதேசத்திற்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் லெவன்தான் (IND vs NZ Test, Playing XI) விளையாடுமா அல்லது மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில், பெங்களூருவில் கருப்பு மண் ஆடுகளம் என்பதால் கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ள இந்திய அணி விரும்பலாம்.
ஒரே ஒரு மாற்றம்
அந்த வகையில், வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிற்கு (Mohammed Siraj) பதில் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஒரு மாற்றம் மட்டுமே இந்திய அணியில் இருக்கும் எனலாம். சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் துடிப்பான வீரர்களாக இருந்தாலும் கூட கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோருக்கு மாற்றாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர்.
இந்திய அணி பிளேயிங் லெவன் (கணிப்பு): ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்