காஞ்சிபுரம்: விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் தங்களின் குடியிருப்புகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 14 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டன.
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் எனக்கூறி கடந்த 810 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தினர் ஏற்கெனவே போராட்டத்தை நடத்தி வந்தாலும், 3 தினங்களுக்கு முன்பு நாகப்பட்டு கிராமத்துக்கு கணக்கெடுப்புக்கு வந்த அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு, விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று நெல்வாய், பரந்தூர், ஏகனாபுரம் மற்றும் நாகப்பட்டு உள்ளிட்ட கிராமத்தினர் விமான நிலைய வேண்டாம் எனவும், மச்சேந்திரன் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கூறி வீடுகளில் கருப்புக் கொடி கட்டி முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையிலான விவசாய சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடியிருப்புகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.