இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தளம், கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அம்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அதிப திலகரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடும் மழை காரணமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான நிவாரண ஏற்பாடுகள் மாவட்ட செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை அழைத்துச் செல்ல இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் தமது படகுகள்;, ட்ரக் வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வெள்ளம் காரணமாக வீதிகள் தடைப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், அதற்காக இராணுவத்தினர் ட்ரக் வண்டிகள் மற்றும் உழவு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும்; தெரிவித்தார்.
இதேவேளை, அனர்த்த முகாம்களில் உள்ள மக்களுக்கு மாத்திரமன்றி, பாதிக்கப்பட்டவர்களின்; வீடுகளின் மேல் தளத்தில் உள்ளவர்களுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கும்; உணவு, பானங்கள் மற்றும் சுகாதாரத் தேவைகள் போன்ற நிவாரணங்களை வழங்கிவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.