மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற தடை விதிக்கப்பட்டு, மனுக்கள் அனைத்தும் வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கவும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில், “தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாரம்பரிய வனவாசிகளாக கருத வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
பிபிடிசி நிறுவனம் சார்பில், இந்த விவகாரத்தில் சிலர் அரசியல் நோக்குடன் தலையிட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், அனைத்து தரப்பிலும் விரிவான வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்.23க்கு ஒத்திவைத்தனர்.