சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும், என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (அக்.14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் பூதலூரில் 12 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும்.அரபிக் கடலில் இருக்கின்ற காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்றிரவு வலுப்பெற்று தொடர்ந்து அது ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்கிறது.
இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும். அடுத்துவரும் 24 மணி நேரத்துக்கு, டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை (அக்.15), டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அக்.16-ம் தேதி, வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக கனமழையும், அதனை ஒட்டியுள்ள திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அக்.17-ம் தேதி, வடமேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடல் பகுதி, தெற்கு வங்க கடல் பகுதி, தென் மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இன்று (அக்.14) முதல் அக்.18ம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.