பணத்தை சேமிப்பது ஒரு கலை. அந்தக் கலையில் கைதேந்துவிட விரும்புகிற பலருக்கும் முதல் சாய்ஸாக இருப்பது பங்குச் சந்தை (Share Market). அது குறித்து எளிமையான முறையில் விளக்கும் பகுதிதான் இது!
‘பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா…கூடாதா?’, ‘பங்குச் சந்தையில் எதில் முதலீடு செய்யலாம்?’, ‘பங்குச் சந்தையில் எவ்வளவு லாபம் வரும்?’ என்பதை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு முன்பு, ‘பங்குச் சந்தை என்றால் என்ன?’ என்பதை முதலில் தெரிந்துக்கொள்வோம் மக்களே…
பங்குச்சந்தை என்றால்…
IPO-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் இடமே பங்குச்சந்தை ஆகும். இந்த ஒரு வாக்கியத்திலேயே ‘IPO என்றால் என்ன?’, ‘ஏன் பட்டியலிடப்படுகிறது?’, ‘எப்படி வாங்க வேண்டும்…விற்க வேண்டும்?’ என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்திருக்கும். எதற்கும் பதற்றம் வேண்டாம். ஒரு உதாரணம் மூலம் இவற்றை தெரிந்துக்கொள்வோம்.
கோவையில் ராஜ் என்பவர் பல வருடங்களாக துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கடையை ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை முழுக்க முழுக்க அவருடைய முதலீடு மற்றும் உழைப்பு மட்டும் தான் இருக்கிறது.
இப்போது அவருக்கு அந்த துணிக்கடையை விரிவுப்படுத்த வேண்டும். ஆனால் கையில் காசு இல்லை. வங்கியில் இருந்து கடன் வாங்கவும் விரும்பவில்லை. ஏனெனில், ஒருவேளை கடன் கட்ட முடியவில்லை என்றால் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடும்.
அதனால், பணத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார்.
IPO-வில் பட்டியலிடுவதின் மூலம்
ராஜின் துணிக்கடையின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி. துணிக்கடையை விரிவுப்படுத்த இந்த ஒரு கோடி ரூபாயை 10,000 பங்குகளாக பிரித்து IPO (Initial Public Offering)-வில் பட்டியிலிடுவார், ராஜ். இதன் மூலம் ராஜின் துணிக்கடை பங்குச்சந்தையில் நுழையும். அதாவது ஒருவர் பங்குகளை விற்க வேண்டுமானால், முதலில் IPO-ல் பட்டியலிட வேண்டும். பின்னர் தான், அவரது நிறுவனம் பங்குச்சந்தையில் நுழையும். இப்போது ராஜின் துணிக்கடை மதிப்பு ரூ.1 கோடியை 10,000 பங்குகளாக பிரிக்கும்போது, ஒரு பங்கின் விலை ரூ.1,000.
ஒருவர் ராஜின் துணிக்கடை பங்கை வாங்குகிறார் என்றால், அந்த காசு ராஜுக்கு சென்று சேரும். பங்கை வாங்கிய நபர் ராஜின் துணிக்கடையில் ஷேர் ஹோல்டர் (பார்ட்னர்) ஆகிறார். அப்போது அந்தக் கடையின் லாப, நஷ்டத்தில் பங்குக்கொள்கிறார்.
இன்னொரு பக்கம், இவரிடம் இருந்து பெற்ற காசில் துணிக்கடையை விரிவுப்படுத்துவார் ராஜ். ஆக, ராஜ் பட்டியலிட்டு பணம் பெறும் இடமும், பணம் கொடுத்து ஒருவர் ராஜின் துணிக்கடையை வாங்கும் இடமும் தான் பங்குச்சந்தை என்று அழைக்கப்படுகிறது.
இவ்வளவு தாங்க…’பங்கு சந்தை’ கான்செப்ட்.
இதில் BSE, NSE ஆகியவை பற்றி இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
நாளை: பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?