கன்னட பிக் பாஸ் 11-வது சீசன் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி 2013-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. அப்போதிலிருந்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்தான் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வருகிறார். அவர் தற்போது இந்தாண்டு பிக் பாஸ் சீசனுக்குப் பிறகு விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
தமிழ் பிக் பாஸும் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. தமிழிலும் கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்தாண்டு சில காரணங்களினால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்திருந்தார். இந்தாண்டு புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியிருக்கிறார். இது போன்ற நிகழ்ச்சிக்குத் தேவையான அத்தனை பொழுதுபோக்கு அம்சத்துடனும் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியிலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை 11 ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய கிச்சா சுதீப் இந்தாண்டிற்குப் பிறகு நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறார்.
இது குறித்து அவர், ” இத்தனை ஆண்டுகள் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. இந்த நிகழ்ச்சி மீதும் என் மீதம் எந்தளவுக்குக் காதல் வைத்திருக்கிறீர்கள் என்பதை டி.ஆர்.பி சொல்கிறது. 11 ஆண்டுகள் ஒன்றாகப் பயணித்தது சிறப்பான விஷயம். தற்போது இது எனக்கான நேரம். இதிலிருந்து விலகி தற்போது எனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனம் செலுத்தவிருக்கிறேன். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் இதுதான். என்னுடைய இந்த முடிவுக்கு சேனலும், பிக் பாஸ் ரசிகர்களும் மரியாதை கொடுப்பார்கள் எனத் தீர்க்கமாக நம்புகிறேன். இந்த சீசனை சிறப்பாக நடத்தி முடிப்போம். நான் நிச்சயமாக உங்களை என்டர்டெயின் செய்வேன்.” எனக் கூறியிருக்கிறார்.
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…