ரத்தன் டாடாவுடனான நினைவுகளை பற்றி டாடா சன்ஸின் தலைவர் சந்திரசேகரன் லிங்க்ட் இன் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
“ரத்தன் டாடாவைச் சந்தித்த எவரும் அவருடைய மனிதாபிமானம், அரவணைப்பு, இந்தியாவை பற்றிய அவருடைய கனவு ஆகியவற்றை பற்றிய கதை இல்லாமல் இருக்கமாட்டார்கள். அவரைப் போல் யாருமே இங்கில்லை.
எங்களுடைய உறவு ஆண்டுகணக்காக வளர்ந்தது ஆகும். அது முதலில் பிசினஸ் சார்ந்ததாக தொடங்கி, பின்னர் பெர்சனலாகவும் மாறியது. கார்களில் இருந்து ஹோட்டல்கள் வரை அனைத்தை பற்றியும் பேசியிருக்கிறோம். அந்த பேச்சு தின வாழ்க்கை நிகழ்வுகள் பற்றியதாக மாறும்போது, அவர் எவ்வளவு விஷயங்களை உன்னிப்பாக கவனித்திருக்கிறார் என்பது தெரிய வரும். ஆண்டுகணக்கிலான அவருடைய அனுபவம் மூலம் அவரை அடையாளப்படுத்த வேண்டும்.
தொழிலாளர்கள் நலனிலும்…
அப்படியான பல அனுபவங்கள் உள்ளன.
நான் தலைவரான புதிதில், டாடா மோட்டர்ஸில் இரண்டு ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தாததையொட்டி நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கு பிரச்னை ஏற்பட்டது. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நானும், ரத்தன் டாடாவும் யூனியன் தலைவர்களைச் சந்தித்தோம்.
அந்த சந்திப்பின்போது ரத்தன் டாடா பிரச்னைக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு மன்னிப்பு கூறி, நிறுவனம் செல்லும் கடினமான பாதை குறித்து விளக்கினார். பின்னர், நாங்கள் இருவரும் அடுத்த இரண்டு வாரங்களில் பிரச்னை தீர்க்கப்படும் என்று உறுதியளித்தோம். இதில் ரத்தம் டாடா பிரச்னையை மட்டும் தீர்க்க முற்படாமல், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனில் அக்கறை காட்டினார்.
அனைத்து டாடா கம்பெனிகளில் உள்ள தொழிலாளர்களையும் அவர் ஒரே மாதிரிதான் பார்த்தார். அதுதான் டாடா நிறுவனத்தில் இருக்கும் அனைத்து தலைவர்களையும் செதுக்கியுள்ளது.
நாய்கள் எங்கே போகும்?
ஒரு முறை பாம்பே ஹவுஸை (தலைமையகம்) புதுப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். 1924-ம் ஆண்டு முதல், அதுவரை பாம்பே ஹவுஸில் எந்த புதுபித்தலும் நடந்தது இல்லை. அதில், ரத்தன் டாடாவிற்கு விருப்பம் இல்லை என்பதுதான் காரணம் (பல பேர் இது குறித்து என்னிடம் கூறியுள்ளனர்). என்னிடம் பேசியவர்கள் ‘பாம்பே ஹவுஸ் ஒரு கோவில்’ என்று அதன் புனிதத்தை பற்றி கூறினர்.
கடைசியாக, பாம்பே ஹவுஸ் புதுப்பித்தல் குறித்து நான் ரத்தன் டாடாவிடன் சொன்னபோது, ‘புதுப்பித்தல் என்று நீங்கள் கூறுவது, பாம்பே ஹவுஸை காலி செய்வதா?’ என்று கேட்டார்.
பாம்பே ஹவுஸில் இருக்கும் அனைவரையும் பக்கத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு மாற்றும் பிளான் பற்றி கூறினேன்.
அப்போது அவர், ‘பாம்பே ஹவுஸில் இருக்கும் நாய்கள் எங்கே போகும்?’ என்று கேட்டார். ஏனென்றால், நாய்களும் பாம்பே ஹவுஸின் ஒரு அங்கம் ஆகும். எப்போதுமே அதன் ரிசப்ஷனில் நாய்களை காண முடியும்.
‘நாய்களுக்கு என தனி வீடு கட்டப்படும்’ என்று பதிலளித்தேன். பின்னர், அவர் பிளானை ஒப்புக்கொண்டார்.
பாம்பே ஹவுஸின் புதுப்பித்தல் முடிந்த பிறகு, ரத்தன் டாடா முதலில் வந்து பார்த்தது நாய்களின் வீட்டைத்தான். நாய் வீட்டின் டிசைன் மற்றும் அதற்கெனெ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர் மிகவும் மகிழ்ந்தார்.
அவருடைய மகிழ்ச்சியைப் பார்க்கும்போது, ‘என்ன தான் பெரிய திட்டங்கள் முக்கியமாக இருந்தாலும், எதை நாம் முன்னிருத்துகிறோம் என்பது முக்கியம்’ என்று எனக்கு புரிந்தது. நான் ஒரு சரியான விஷயத்தைத்தான் செய்திருக்கிறேன் என்பதை அவரது மகிழ்ச்சி எனக்கு உறுதிப்படுத்தியது.
போட்டோகிராபிக் நினைவுக்காரர்
ரத்தன் டாடா எந்த இடத்திற்கு சென்றாலும், அங்கே இருந்த சின்ன நாற்காலி தொடங்கி லைட்டிங், நிறங்கள் என அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வார். அவருடைய நினைவு போட்டோகிராபிக் நினைவு ஆகும்.
புத்தகங்களின் கவர் படம், அதில் என்ன இருந்தது, அது வெளிவந்த ஆண்டு என அத்தனையையும் நினைவில் வைத்திருப்பார். அவர் எப்போதும் பெரிய ஐடியா முதல் சின்ன தகவல் வரை அனைத்தையும் கவனித்துக்கொண்டும், செயல்படுத்திக்கொண்டும் இருப்பார்.
அவரைப் பற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால், இப்போது அவருடைய இல்லாமையில், ‘அவர் எப்படி அனைத்தையும் தெளிவாக பார்த்து, தெளிவாக புரிந்துகொண்டாரோ’ அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.