சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இளம் மனங்களின் கனவுகளை நனவாக்க தூண்டிய தலைவர் என அப்போது அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 93-வது பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அப்துல்கலாமின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. துணைமேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். இதேபோல் பல்வேறு கட்சிகளின் அலுவலகங்களில் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகனுமான ஏ.பி.ஜெ.அப்துல்கலாமுக்கு அவரது பிறந்தநாளில் பணிவுடன் மரியாதை செலுத்துவோம். எண்ணற்ற இளம்மனங்களின் கனவுகளையும், ஆசைகளையும் நனவாக்க அவர்களை தூண்டிய தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். வலுவான இந்தியாவை உருவாக்க அவரது தொலைநோக்கு பார்வை வழிநடத்தும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கல்வியும், நெஞ்சில் கனவும், அதை நனவாக்கத் தேவையான கடும் உழைப்பும் இருந்தால் உயர்வு நம்மைத் தேடி வரும் என்ற ஊக்கத்தை இளைஞர்களிடம் விதைத்தவர். இளைஞர்களின் கனவுகள் மெய்ப்பட ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கல்வியின் துணை கொண்டு, அறிவில் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மாணவர்களின் இதயங்களில் லட்சியக் கனவுகளை விதைத்த சாதனை நாயகர் அப்துல்கலாம். நம் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி. இளைஞர்களின் வழிகாட்டி. அவரது பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும், சேவைகளையும் போற்றி வணங்குவோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும். சிந்தனைகள் செயல்களாகும் என இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பெருமைக்குரியவர் அப்துல்கலாம். அவரது புகழை போற்றி வணங்குகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்திய நாட்டில் இளைய குடிமகனாக பிறந்து, தொழில்நுட்ப அறிவு மற்றும் தேசப்பற்றால் வலுவூட்டப்பட்டு, வளமான இந்தியாவை உருவாக்க செயல்பட்ட அப்துல்கலாமின் பிறந்தநாளில், அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: இளைஞர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர். தமது வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்தே சிந்தித்தவர் அப்துல்கலாம். அவரது பிறந்தநாளில் இளைஞர்களைக் கொண்டு இந்தியாவை முன்னேற்ற நாம் உறுதியேற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்திய ஏவுகணை நாயகன். மாணவர்கள், இளைய தலைமுறையினர் வாழ்வில் சிறந்து விளங்க உந்து சக்தியாக திகழ்ந்தவர். அவரது சாதனைகளை போற்றி கொண்டாடுவோம்.